தமிழர் தரப்பை ஒருங்கிணைத்தல் சாத்தியமாகுமா?
தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புக்கள் வெட்டியோடுதல்களைக் கடந்து தற்போது தமிழ் மக்களையும் தேசத்தையும் பாதுகாக்க வேண்டிய பாரியதொரு கடப்பாடு முன்னிருக்கிறது.
தமிழ் சமூகம் வரலாற்று ரீதியாகத் தொடர்ச்சியான ஏமாற்றங்களைச் சந்தித்த போதும், மீண்டும் மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தன்களைப் போல தனது உரிமைகளுக்காகப் போராடும் குணாதிசயத்தைக் கொண்டதாகவே உள்ளது.
சிதறிக்கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓர் ஒருங்கிணைந்த அரசியல் தளத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் காலத்திற்கு காலம் பலதரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை ஒருபுறமும், வடக்கு - கிழக்கு ஆயர்கள் மன்றம் மறுபுறமும் இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை, அரசியல் தீர்வு தொடர்பாக ஒருங்கிணைந்த குரலை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிகளில் சில முதற்கட்ட வெற்றிகளைக் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக, அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்துடன் பேசும் போது கட்சி அடிப்படையிலும் தனித்தும் செயற்படுவதில்லை என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதனை ஆமோதித்து, தந்தை செல்வாவின் பிறந்த தின நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விரைவில் இதற்கான ஆவணத்தை தயாரிக்கப் போவதாகக் கூறியிருப்பது ஒரு நம்பிக்கையூட்டும் நகர்வாகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, இந்த ஒருங்கிணைந்த அரசியல் அணுகுமுறை பல காரணங்களுக்காக இன்றியமையாதது.
முதலாவதாக, நிலையானதொரு அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பதாகும். அரசியல் தீர்வு இன்றித் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்பது நாம் வரலாற்று ரீதியாகக் கண்ட உண்மை. ஒருங்கிணைந்த குரல் இல்லையெனில், அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை வலிமையாக்க முடியாது.
இதற்காக அரசியல் தீர்வின் கோட்பாட்டு வரைவுகளைத் தயாரிப்பதும், தாயக, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் அதனைப் பேசுபொருளாக்கி உலகு தழுவிய ரீதியில் அழுத்தங்களைக் கொடுப்பதும் அவசியமாகும். இங்கு முக்கியமானது, அரசியல் தீர்வுக்கான சர்வதேச சூழலைத் தமிழருக்குச் சாதகமாகக் கனிய வைப்பதே ஆகும்.
இரண்டாவதாக, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை மேம்படுத்துவதாகும். யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாடு. 'குற்றம் செய்தவனே நீதிபதியாக இருக்க முடியாது' என்ற இயற்கை நீதிக்கோட்பாட்டின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால வரலாறுகள் சர்வதேச தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
இதில் சாட்சியங்களைத் தொகுப்பது மிக முக்கியமானது. கண்கண்ட சாட்சிகள் பலர் தற்போதும் வாழ்கின்றனர.;; அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு இந்த ஒருங்கிணைந்த தலைமைக்கு உண்டு.
ஆயுதப் போர் மௌனிக்கப்பட்ட பின்னர், நில ஆக்கிரமிப்புகள் ஒரு தொடர் கதையாகியுள்ளன. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.
கிவுல் ஓயாத் திட்டம், முல்லைத்தீவில் தமிழர் காணிகளில் சிங்களத் தரப்பின் உப்பளம் அமைக்கும் முயற்சிகள் போன்றவை தடையின்றி நடக்கின்றன. குறிப்பாகத் தாயகத் தொடர்ச்சியின் மையப் பகுதிகளான முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்குப் பகுதிகள் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகின்றன. திருகோணமலையில் ஆக்கிரமிப்புகள் முழுமை அடைந்ததைத் தொடர்ந்தே அடுத்த இலக்காக இவை மாற்றப்பட்டுள்ளன.
இனப்பிரச்சினை என்பது ஒரு தேசிய இன அழிப்பாக இருப்பதால், எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த ஆக்கிரமிப்புகள் தொடரவே போகின்றன. இதனைத் தடுக்க சர்வதேச அரசியல் பாதுகாப்புப் பொறிமுறை ஒன்று அவசியம்.
இதற்குத் தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து 'பொத்துவில் முதல் பொலிகண்டி வரை' போன்ற பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் மற்றும் இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை மீட்டெடுத்தல் போன்ற விடயங்களில் ஒருங்கிணைந்த அழுத்தம் மிக முக்கியமானது.
30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையிலுள்ள தமிழ் இளைஞர்களை 'அரசியல் கைதிகள்' என அங்கீகரிக்கவே தற்போதைய அரசுத் தரப்புத் தயங்குகிறது. அதேபோல, காணாமல் போனோர் விவகாரத்தில் நீதியைப் பெற்றுக்கொள்வதை உறவுகளிடம் மட்டும் விட்டுவிடாமல், அரசியல் கட்சிகள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும்.
வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாத காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதும், தையிட்டி போன்ற இடங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
வரப்போகும் மாகாண சபைத் தேர்தல்கள் தமிழ் அரசியலுக்குப் பாரிய சவாலாக அமையவுள்ளன. தென்னிலங்கையின் தேசிய மக்கள் சக்தி தாயகப் பகுதிகளில் தனது செல்வாக்கை அதிகரித்து வருகின்றது.
'பிரஜாசக்தி' போன்ற அமைப்புகள் ஊடாக உள்ளுர் நிர்வாகங்களில் தன்னிச்சையாகத் தலையிடுவதும், நிழல் அமைச்சரவை போன்ற கட்டமைப்புகளை உருவாக்குவதும் தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்தும் உத்திகளாகும். தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடாவிட்டால், மாகாண சபைகளின் அதிகாரங்கள் தென்னிலங்கைக் கட்சிகளின் வசமாகிவிடும் அபாயம் உள்ளது.
தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்கு ஒருங்கிணைந்த அரசியல் தலைமை அவசியம். தாயகத்தில் பலமான ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே, புலம்பெயர் மக்களையும் உலகெங்கும் உள்ள முற்போக்குச் சக்திகளையும் எமது இலக்கை நோக்கி அணிதிரட்ட முடியும்.
ஒருங்கிணைவு முயற்சி வெற்றி பெற வேண்டுமாயின், கொள்கை உறுதிப்பாடு, பங்காளிகளிடையே சம அந்தஸ்து மற்றும் முறையான அமைப்புப் பொறிமுறை என்பன பேணப்பட வேண்டும். தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையும், ஆயர்கள் மன்றமும் தனித்தனியாகச் செயற்படாமல் இணைந்து பணியாற்றுவது அதிக விளைபயனைத் தரும்.
இந்த ஒருங்கிணைப்பு முயற்சியை வெறும் தேர்தல் கூட்டாக அன்றி, ஒரு வலுவான அரசியல் இயக்கமாக முன்னெடுப்பதே தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும். தமிழர் தரப்பு இந்த வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புக்கள் வெட்டியோடுதல்களைக் கடந்து தற்போது தமிழ் மக்களையும் தேசத்தையும் பாதுகாக்க வேண்டிய பாரியதொரு கடப்பாடு முன்னிருக்கிறது.
அதுகுறித்த புரிதலின்றிய முடிவுகள் அனைத்துமே தமிழினத்தின் எதிர்கால இருப்புக்கு கேள்விக்குறியாகவே அமையும்.





