நாணய நிதியத்தின் 5, 6ஆவது மீளாய்வுகள் அடுத்த வாரம்
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தற்போதைய கொள்கை கட்டமைப்பு கணிசமான அளவில் வலுவாகக் காணப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வருகிறது. அதற்கமைய, நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழான இலங்கையின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை வரும் 27ஆம் திகதி புதன்கிழமை பரிசீலிக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபகோர்ஜியோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : கடந்த ஆண்டுகளில், இலங்கையின் அதிகாரிகள் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும், நாட்டின் கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இந்த முயற்சிகள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்துவதற்கும் இவை உதவியுள்ளன.
சவாலான உலகளாவிய வெளிப்புறச் சூழலில் உள்ள பல பொருளாதாரங்களைப் போலவே, சமீபத்திய உலகளாவிய முன்னேற்றங்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் புதிய அழுத்தங்களைக் கொண்டுவந்துள்ளன. இவ்வாறான அதிர்ச்சிகளை எதிர்கொண்டு பயணிப்பது என்பது ஒருபோதும் எளிதான காரியம் அல்ல. எனினும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தற்போதைய கொள்கை கட்டமைப்பு கணிசமான அளவில் வலுவாகக் காணப்படுகிறது.
நிலையான கொள்கைப் பாதையைப் பேணுவதும், மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப பொருளாதாரம் சீரமைவதைத் தொடர்ந்து அனுமதிப்பதும் இதுவரை ஈட்டப்பட்ட நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மிக முக்கிய காரணியாக அமையும். சீர்திருத்த வேலைத்திட்டங்கள் மேலும் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது.





