கோட்டாபயவின் ரீட் மனு மீதான பரிசீலனை ஜூன் 24 க்கு ஒத்திவைப்பு
சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்று அது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க அன்றைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், தான் கைது செய்வதைத் தடுத்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு மீதான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நேற்றைய தினம் இம்மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவது என்பது, எந்தவொரு நியாயமான அடிப்படையும் இன்றி நபர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது அல்ல. விளக்கமறியல் என்பது ஒரு தண்டனையாக அமையக் கூடாது . எனது சேவைபெறுநர் இந்த விவகாரம் தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் இதுவரை அழைக்கப்படவுமில்லை, அதேபோன்று இந்த விசாரணைகளின் எந்தவொரு சாட்சியாளருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவும் இல்லை.
அவ்வாறிருக்கையில் எவ்வித நியாயமான காரணமும் இன்றி, பிரதிவாதிகள் எனது சேவை பெறுநருக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றினூடாக வெளிநாட்டுப் பயணத் தடையொன்றைப் பெற்றுள்ளனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டால், அவருக்குப் பிணை பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரம் பறிக்கப்படும் என்பதால் மனுதாரர் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரிப்பதுக்கு நியமிக்கப்பட்ட, தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, 214 நாட்களில் 257 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததுடன் ஆறு தொகுதிகளைக் கொண்ட உத்தியோகபூர்வ அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையின் எந்தவொரு இடத்திலும் இந்த மனுதாரருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்றார்.
அதேபோன்று, இத்தாக்குதலைத் தடுப்பதற்குத் தவறியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, ஜைகி த அல்விஸ் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பொன்றின் தலையீடு இருந்தமை வெளிப்பட்டிருந்தது.
அவ்வாறிருந்தும், சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்று அது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க அன்றைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
இதன்போது பிரதிவாதி சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விளக்கமளிக்கையில், எதிர் தரப்பு சட்டத்தரணி சட்ட மாஅதிபர் திணைக்களம் குழப்பகரமானது என சித்தரிக்க முயற்சிக்கிறார். ஊடகங்களை இலக்கு வைத்தே இவ்வாறு செயற்படுகின்றனர் என்றார். இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு மனு மீதான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது.





