26 பாதாள உலக முக்கியஸ்தர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு
மன்றில் முன்வைக்கப்பட்ட அனைத்துக் சட்சியங்களையும் பரிசீலித்த பிரதம நீதிவான், சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதமாக நிறைவு செய்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
போலி பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள 26 பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 26 பேரை கைது செய்வதற்கான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு கொழும்பு நீதிவான் அசங்க எஸ் போதரகம 27-02-2026அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு (சி.ஐ,டி) உத்தரவிட்டார்.
இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் (26) கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அசங்க எஸ் போதரகம முன்னிலையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டப் போதே அவர் மேற்படி உத்தரவை பிறப்பித்திருந்தார். நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள 26 முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.
குறித்த 26 சந்தேகநபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், இருவர் தொடர்பான விசாரணை முன்னேற்றங்களை மாத்திரம் நீதிமன்றில் சமர்ப்பித்தது ஏன் என நீதவான் இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பொலிஸார், குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட சந்தேகநபர்களின் கைரேகை அடையாள அறிக்கைகள் கைரேகை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், இதுவரை இரண்டு அறிக்கைகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி 26 சந்தேகநபர்களினதும் கைரேகை அறிக்கைகள் கோரப்பட்டுள்ளனவா என நீதவான் வினவினார். அதற்குப் பதிலளித்த பொலிஸார், அனைத்து கைரேகை அறிக்கைகளையும் கைரேகை அலுவலகத்திற்கு அனுப்பி விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டனர்.
மன்றில் முன்வைக்கப்பட்ட அனைத்துக் சட்சியங்களையும் பரிசீலித்த பிரதம நீதிவான், சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதமாக நிறைவு செய்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும், விசாரணை அதிகாரிகளுக்கு நீதிவான் இதன்போது மேலும் உத்தரவிட்டிருந்தார். தமது உண்மையான விபரங்களை மறைத்து பிற நபர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக கடவுச்சீட்டுகளைப் பெற்று வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும், பாதாள உலக்குழுவினர் தொடர்பான விசாரணைகளுக்கமையவே நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





