மின் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நுரைச்சோலை மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவது குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உண்மையை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தரமற்ற நிலக்கரி பயன்பாட்டால் மின் உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய இழப்பை, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சுமத்தினார்.
நேற்று திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய 810 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, முதல் அலகிலிருந்து 216 மெகாவோட்டும், இரண்டாம் அலகிலிருந்து 230 மெகாவோட்டும், மூன்றாம் அலகிலிருந்து 232 மெகாவோட்டும் என நேற்றைய தினம் மொத்தமாக 678 மெகாவோட் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டமையே இந்த உற்பத்தி வீழ்ச்சிக்கு நேரடி காரணமாகும் என்று அவர் குற்றம் சுமத்தினார்.
இவ்வாறு தரமற்ற நிலக்கரி காரணமாக மின் உற்பத்தி குறையும் போது, அந்த இடைவெளியை நிரப்புவதற்காக அதிக செலவுமிக்க எரிபொருள் மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்படுகிறது.
இச்சமயம் ஏற்படும் மேலதிக உற்பத்திச் செலவுகளை ஈடுகட்ட, 75 இலட்சம் மின்சார நுகர்வோரிடம் இருந்து அந்த நிதியை அறவிட அரசாங்கம் இரகசியமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதன் காரணமாக வருங்காலத்தில் மின் அலகுகளுக்கான கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
தற்போதைய மக்கள் விரோத அரசாங்கம், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை ஒரு சாட்டாக முன்வைத்து, தவறான தகவல்களைப் பரப்பி மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் இழிவான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே நுரைச்சோலை மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவது குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உண்மையை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். முறையான நிர்வாகத் திறமையின்மையால் தேவையான மெகாவோட் அளவு உற்பத்தியாகாமல், அதற்குப் பதிலாக எரிபொருள் நிலையங்களை நாடி மின்கட்டணத்தை அதிகரிப்பது என்பது மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட சமூக உடன்படிக்கையை மீறும் செயலாகும். இந்த மோசடிக்கும் பொய்க்கும் அரசாங்கமே முழுமையான பொறுப்பைக் கூற வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், மத்திய கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டி மின்சாரக் கட்டணத்தை கூட்டுவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார். ஒருவேளை அவ்வாறு மின்கட்டணம் உயர்த்தப்பட்டால், மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராடப் போவதாகவும் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்தார்.





