மத்திய வங்கி தன்னிச்சையாக செயற்பாடு - ரவி கருணாநாயக்க
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைப் பணம் கிடைத்த போதிலும், அரசாங்கம் நாட்டையும் மக்களையும் கடுமையான வரி சுமையால் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
மத்திய வங்கியின் தன்னிச்சையான செயற்பாடுகளை தேடிப்பார்ப்பதற்கு உடனடியாக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும். அதுதொடர்பான பிரேரணை ஒன்றுக்கு 40 க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன் உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் 05-06-2026 அன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் மூலம் நாட்டுக்கு ஆகுமான நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றதா அல்லது அது நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சினையாகி இருக்கிறதா என்பது தொடர்பில் தேடிப்பார்த்து, பொருத்தமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதுதொடர்பான பிரேரணை ஒன்றுக்கு இதுவரை 40க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
ரூபா ஸ்திரமான நிலையில் இருப்பதாக அரசாங்கமும் மத்திய வங்கியும் கூறினாலும், திரைக்குப் பின்னால் இருப்பது ஒரு செயற்கையான மிதக்கும் நிலையாகும். அதனால் இதன் இறுதிச் சுமையை பொதுமக்களே சுமக்க நேரிடுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைப் பணம் கிடைத்த போதிலும், அரசாங்கம் நாட்டையும் மக்களையும் கடுமையான வரி சுமையால் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அதேநேரம் 2026 டிசம்பர் 31ஆம் திகதியுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் இருக்கும் ஒப்பந்தம் முடிவடைகிறது. அதன் பின்னர் அரசாங்கம் மேற்கொள்ள இருக்கும் எதிர்கால வேலைத்திட்டத்தை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
அதேநேரம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய இரண்டு பிரதான அரச வங்கிகளையும் தனியார்மயமாக்குவதற்கான இரகசிய திட்டமொன்று இடம்பெற்று வருகிறது. மத்திய வங்கி கடந்த மாதம் வெளியிட்டிருந்த அறிக்கை மூலம் இதனை புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் இதுதொடர்பில் நாங்கள் அவதானமாக இருக்கிறோம்.
அதேநேரம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்காக ஏற்கனவே 10 சதவீத வரி அறவிடப்படுகிறது. பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 20 சதவீத வரி வித்திருந்தார். தற்போது மீண்டும் நூற்றுக்கு 12.5 வீத வரி விதிக்க தயாராகி வருகிறார். அவ்வாறான நிலை ஏற்பட்டால் எமது ஏற்றுமதிகளில் போட்டித்தன்மை இல்லாமல்போகும். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கலந்துரையாடி, ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.





