கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு சந்தேகநபர்கள் யாழில் கைது
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 07-11-2025 அன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய பெண் னொருவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து மானிப்பாய் பொலிஸாரால் 07-11-2025அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதலே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த நபர் 43 வயதுடைய கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிப்பவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொல்லப்பட்ட நபர், முக்கிய பாதாள உலகக் குழு செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரான 'பூக்குடு கண்ணா' என்று அழைக்கப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவருடன் கடந்த காலங்களில் நெருங்கி செயற்பட்டவர் என்றும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
'பூக்குடு கண்ணா' என்று அழைக்கப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜ் போழதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கிச்சூடுகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேநகபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் தற்போது பூக்குடு கண்ணா என்பவருடனான தொடர்புகளைத் துண்டித்துள்ள போதிலும், பூக்குடு கண்ணா மற்றும் பழனி ரிமோஷன் என்ற தரப்பினருக்கிடையிலான நீண்ட கால மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை - 16ஆவது ஒழுங்கை பகுதியில் தனது கையடக்க தொலைபேசியை பார்த்தவாறு சென்று கொண்டிருந்த குறித்த நபர் மீது, பின்னாலிருந்து வந்த நபரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்படும் காணொளி அருகிலுள்ள சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது. இதன் போது அவர் படுகாயமடைந்து கீழே விழ, காரொன்று அதே திசையில் செல்வதும் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேநபர்களே அதில் பயணித்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 6 விசேட பொலிஸ் விசாரணை குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாண்டில் இதுவரையில் 103 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு மேலும் 56 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





