அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை வேண்டும்: பிரேம்நாத் சி தொலவத்த
பொலிஸ்மா அதிபரை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு அவர் மீது அழுத்தம் பிரயோகிக்காமல், அவருக்கு சுயாதீனமாக செயற்பட இடமளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
 
        
பாராளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகளுக்கு பாரிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டும். நாட்டு பிரஜைகளின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்த தவறிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அந்த பதவியை வகிக்க தகுதியற்றவரென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது அரசாங்கத்துக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ள அரசியல்வாதிகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவது மாத்திரமின்றி, பாதாள உலகக் குழுக்களுடனும் அவர்கள் தொடர்புபடுத்தப்படுகின்றனர்.
வெலிக பிரதேசசபை தலைவர் கொல்லப்பட்ட பின்னரும் அவரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி அமைச்சரவை அமைச்சரொருவர் அவமதிப்பிற்கு உட்படுத்துகின்றார். இவ்வாறான பழிகளை சுமத்தி அவர் கொல்லப்பட்டமையை நியாயப்படுத்த முற்படுகின்றனர். தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதாரனவுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகளின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஏன் இவ்வாறு அசமந்த போக்குடன் செயற்படுகிறது? எதிர்க்கட்சியினரை ஒட்டுமொத்தமாக இல்லாதொழித்து தனி அரசியல் கட்சி ஆட்சியை நிலைநிறுத்துவது தான் அரசாங்கத்தின் இலக்கா?
பாராளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகளுக்கு பாரிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டும். அவர் அமைச்சரவை அமைச்சராவார்.
அவ்வாறிருக்கையில் நபரொருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தால் அவர் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர் எனக் கூறுவதற்கு அமைச்சருக்கு தார்மீக உரிமை கிடையாது. நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரதும் உயிர் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு உயிர் வாழ்வதற்கான உரிமை இல்லை என்றால், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் எதற்காக அதியுயர் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்? நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட பொறிமுறைக்கமையவே எந்தவொரு நபரையும் தண்டனைக்குட்படுத்த முடியும். தண்டனை சட்டக் கோவையின் கீழ் மரண தண்டனை எவ்வாறு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள போதிலும், எமது நாட்டில் கொள்கை ரீதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.
 
மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அதனை அமுல்படுத்தாத மனித நேயமுடைய நாட்டில், எவரையும் சுட்டுக் கொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டமே அனைவருக்கும் மேலானதாகும். தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம்  இன்னும் பொறுப்புடனும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும்.
பொலிஸ்மா அதிபரை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு அவர் மீது அழுத்தம் பிரயோகிக்காமல், அவருக்கு சுயாதீனமாக செயற்பட இடமளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
ஆளுந்தரப்பினர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களை தேடி கைது செய்வதற்காகவே இன்று குற்றப்புலனாய்வு திணைக்களம் காணப்படுகிறது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பு அதுவல்ல. இன்று குற்றவியல் சட்டம் சிவில் சட்டமாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவது குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடிய தவறல்ல. பொலிஸ் சேவையில் காணப்படும் அரசியல் தலையீடு முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும்.
அத்தோடு நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன் என்றார்.





 
  
