சட்ட விரோதமாக சேமிக்கப்பட்ட 200 கோடிக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன: பொலிஸ் பேச்சாளர்
2024 - 2025 இதுவரையான காலப்பகுதியில் 354 பவுன் தங்கம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 6 கோடி ரூபாவாகும்.
 
        
சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்களின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, சட்ட விரோதமாக சேமிக்கப்பட்ட 200 கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கம், வாகனம், வீடு மற்றும் காணி உள்ளிட்ட சொத்துக்கள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 28-10-2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,  இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 இலட்சத்துக்கும் அதிகமான நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் வெ வ்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 5464 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த 95 000 சந்தேகநபர்கள் கைது செய்யப்படு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர்களால் சட்டவிரோதமாக சேமிக்கப்பட்ட சொத்துக்கள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 2024 - 2025 இதுவரையான காலப்பகுதியில் 354 பவுன் தங்கம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 6 கோடி ரூபாவாகும்.
மேலும் 62 கோடி ரூபா பெறுமதியான 72 வாகனங்களும், 69 கோடி பெறுமதியுடைய வீடு மற்றும் காணி உள்ளிட்ட சொத்துக்களும், 67 ரூபா பணமும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் சட்ட விரோத சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.





 
  
