ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர்
எமது நாட்டில் மாத்திரமின்றி உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் மறைமுக ஏகாதிபத்தியம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை முழுமையான சுதந்திர நாடாக மாற வேண்டுமெனில், ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தையும் நாம் தோற்கடித்து, அரசியல், சிவில் மற்றும் குடியியல் சுதந்திரங்கள் போலவே பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார சுதந்திரங்களையும் அடைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி, பொல்வத்த, ஸ்ரீ தர்மகீர்த்தயாராமயத்தில் 04-02-2026அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பௌத்த மத வழிபாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், நமது நாட்டைப் பலப்படுத்தி, ஆள்புல ஒருமைப்பாடு, இறையாண்மை, மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றாய் கூடுகின்றனர். சுதந்திரத்துக்கு பின்னர் ஒரு நாடாக ஏகாதிபத்தியங்களின் பெரும் சக்தியை தோற்கடித்து, ஐக்கிய நாடாக பலப்பட்டு நிற்கிறோம்.
அன்று முன்னெடுக்கப்பட்ட ஏகாதிபத்தியம் இன்றும் வெவ்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார, சமூக மற்றும் ஏனைய பல துறைகளில் நேரடி ஏகாதிபத்தியத்துக்கு பதிலாக, எமது நாட்டில் மாத்திரமின்றி உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் மறைமுக ஏகாதிபத்தியம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நமது நாடு முழுமையான சுதந்திர நாடாக மாற வேண்டுமென்றால், இந்த ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தையும் நாம் தோற்கடித்து, அரசியல், சிவில் மற்றும் குடியியல் சுதந்திரங்கள் போலவே பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார சுதந்திரங்களையும் அடைய வேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும், சௌபாக்கியம் அனைவருக்கும் கிட்டும் சுதந்திரத்தை நாம் உருவாக்க வேண்டும். உலக நாடுகள் மத்தியில் நாம் விரைவான வளர்ச்சியை அடையும்பட்சத்தில், இந்த சுதந்திரம் மேலும் உறுதிப்படும்.
சம்புத்த சாசனத்திற்கு முன்னுரிமையை வழங்குவது உயரிய சட்டமாகும். இங்கு, நாம் சகோதர மதங்களையும் சகோதர சமூகங்களின் கலாசாரங்களையும் பாதுகாத்து ஒற்றுமையுடன் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட அரசியல் இயக்கங்கள் காணப்பட்டாலும், அவை எந்த கருத்தை அல்லது கோட்பாட்டைப் பின்பற்றினாலும், பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றாய் இணைந்து, நாட்டின் இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாட்டை காக்க வேண்டும். 78 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், முழுமையான சுதந்திரத்தை அடைந்து, இந்த முற்போக்கான எதிர்கால பயணத்திற்கு அனைவரும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.





