அனர்த்த முகாமைத்துவத்தை பலப்படுத்த இலங்கைக்கு அமெரிக்கா பயிற்சி
பாதுகாப்பமைச்சிற்கும் அமெரிக்காவின் மொன்டானா தேசிய காவற்படைக்குமிடையில் 2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இப்பயிற்சி நடத்தப்பட்டது.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதாபிமான அவசரநிலைகளை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் பங்கேற்புடன் காலியில் 3 நாட்கள் பயிலரங்கொன்று நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பமைச்சிற்கும் அமெரிக்காவின் மொன்டானா தேசிய காவற்படைக்குமிடையில் 2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்க பசிபிக் கட்டளைப்பீடத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மொன்டானா தேசிய காவற்படை மற்றும் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
மாறிவரும் பேரனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளல், வளங்களை ஒருங்கிணைத்தல், பொது தகவல் தொடர்புகளைக் கையாளுதல் மற்றும் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் அவசர முடிவுகளை எடுத்தல் போன்ற விடயங்கள் குறித்து இதில் பயிற்சியளிக்கப்பட்டது. அண்மையில் இடம்பெற்ற தித்வா சூறாவளி உள்ளிட்ட பேரனர்த்தங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, அவசரகாலச் சூழ்நிலையைச் சமாளிக்கும் ஒரு கலந்துரையாடல் வடிவப் பயிற்சியுடன் இப்பயிலரங்கு நிறைவுற்றது.
காட்டுத்தீ, வெள்ளம் மற்றும் கடுமையான குளிர்காலப் புயல்களின் போது மொன்டானா மாநில அவசரகாலச் சேவைகள் அமைப்பு மற்றும் மொன்டானா தேசிய காவற்படை பெற்றுக்கொண்ட நிஜ உலக அனுபவங்கள், திட்டமிடல் மற்றும் ஏற்பாட்டியல் நடைமுறைகள் இதன்போது இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், கமத்தொழில், மின்சக்தி, சுற்றாடல் மற்றும் உள்ளூராட்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சுகளின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் சமூகங்களைப் பாதுகாப்பதற்கும், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வலையமைப்புகளைப் பேணி பொருளாதார பாதிப்புகளைக் குறைப்பதற்கும் இத்தகைய கூட்டு அனர்த்த பதிலளிப்புப் பணிகள் மிகவும் அவசியமானவை என்பதை இப்பயிலரங்கு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.





