சிறுவர் உழைப்பை ஒழிக்க கல்வி மறுசீரமைப்பே பிரதான தீர்வு: மொரோக்கோ மாநாட்டில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
இலங்கையில் ஆண்டுதோறும் பதிவாகும் சிறுவர் உழைப்பு தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாகவே காணப்படுகிறது.
சிறுவர் உழைப்பு என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பிரச்சினையல்ல அது பல்வேறு அடிப்படை காரணிகளுடன் பின்னப்பட்ட ஒரு சமூகப் பிரச்சினையாகும். எனவே முறையான கல்வி மறுசீரமைப்பின் ஊடாகவே அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மொரோக்கோவின் மராகேச் நகரில் 12-02-2026 அன்று சிறுவர் உழைப்பை ஒழிப்பதற்கான 6ஆவது சர்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக இடம்பெற்ற உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் ஆண்டுதோறும் பதிவாகும் சிறுவர் உழைப்பு தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் சிறுவர்களின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கே முன்னுரிமை அளித்தது. குறிப்பாக நெருக்கடி காலங்களில் மாணவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்குத் திரும்புவதை உறுதி செய்யும் வகையில் இலவச பாடசாலை உபகரணங்கள் எழுதுகருவிகள் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விசேட உதவித் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது.
சிறுவர் உழைப்பை இல்லாதொழிப்பதற்கான ஒரு நீண்டகாலப் பொறிமுறையாக 2026 ஆம் ஆண்டான இவ்வருடம் முதல் இலங்கையில் புதிய கல்வி மறுசீரமைப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் கீழ் கல்விப் பாடத்திட்டத்துடன் தொழில்சார் திறன் மேம்பாட்டையும் ஒன்றிணைக்கும் இரட்டை வழி கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சீர்திருத்தங்கள் ஊடாக மாணவர்கள் கல்வி கற்கும் போதே எதிர்காலத் தொழில் சந்தைக்குத் தேவையான தகுதிகளைப் பெற்றுக்கொள்ள முடிவதோடு வறுமை காரணமாக மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடை விலகுவதையும் தடுக்க முடியும்.
மேலும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவால்களில் இந்த டிஜிட்டல் மயமாக்கல் உற்பத்தித் திறனை அதிகரித்தாலும் அது சிறுவர்கள் மீதான இணைய வழி சுரண்டல்கள் குறித்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. இதனை எதிர்கொள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் விசேட பிரிவுகள் மூலம் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு சர்வதேச பங்காளர்களின் உதவியுடன் டிஜிட்டல் பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
குடும்ப வருமானத்தை உயர்த்துதல் பெரியவர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் வலுவான சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியன அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமைகளாகக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.





