சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக புதிய சிவில் சமூக இயக்கம் ஸ்தாபிக்கப்படும் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி ஜனநாயகத்தைப் புதைத்து வரும் இந்த காலகட்டத்தில், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் வகையிலான சிவில் சமூக இயக்கத்தின் தேவையொன்று வெகுவாக எழுந்துள்ளது.
ஜனநாயகத்தையும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறி நாட்டில் நிலைகொள்ளும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக புதிய சிவில் சமூக இயக்கமொன்று ஸ்தாபிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பல சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர், இன்று மூன்று அதிகாரங்கள் மீது கட்டமைக்கப்பட்ட ஜனநாயக அரசில், நிறைவேற்று அதிகாரம் படைத்தவர் படிப்படியாக அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்டு சட்டவாக்கத்தின் அதிகாரத்திலும், நீதித்துறையின் இறைமையிலும் தலையிட்டு வருகின்றனர். நீதித்துறையின் சுதந்திரத்தை அழிப்பதற்கும், ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும், நிகழ்நிலை காப்புச் சட்டத்தை பயன்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்படையச் செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி ஜனநாயகத்தைப் புதைத்து வரும் இந்த காலகட்டத்தில், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் வகையிலான சிவில் சமூக இயக்கத்தின் தேவையொன்று வெகுவாக எழுந்துள்ளது. இது ஜனநாயக கட்டமைப்பின் அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளைச் சரியாகவும் தெளிவாகவும் நிறைவேற்றக்கூடிய சிவில் சமூக இயக்கமாக ஆக்குவது மிகவும் முக்கிய விடயமாகும்.
2015, 2019 மற்றும் 2024 தேர்தல்களில் மக்களின் தீர்மானம் எடுக்கும் நடவடிக்கையில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்திய பிரதான தரப்பாக சிவில் அமைப்புகளை அழைக்கலாம். பல சிவில் சமூக அமைப்புகளின் ஆயுட்காலம் பல சந்தர்ப்பங்களில் மிகவும் வரையறுக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. தேர்தல் வெற்றி கிடைத்த பின் இந்த சிவில் அமைப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளாத நிலைமையே தற்போது காணப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், மைத்திரிபால சிரிசேனவை வெற்றிபெற செய்வதற்கும் சிவில் சமூக அமைப்புகள் மகத்தான பல பங்களிப்புகளை வழங்கிய போதிலும், வெற்றியடைந்ததைத் தொடர்ந்து சமூக நீதியை உருவாக்க முன்வந்த அந்த இயக்கம் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானது.
தேர்தல் வெற்றி மாத்திரமின்றி, பொதுமக்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் சமூக ஒப்பந்தத்தை தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியிலும் முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கமாகும். சிவில் சமூக இயக்கங்கள் மூலம் மக்களுக்கு சில தகவல்களை வழங்கி, அரசாங்கங்களை உருவாக்கிக் கொண்ட போதிலும், தேர்தலுக்கு பின் மக்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது ஆட்சிக்கு வந்த தரப்புகளாலயே இந்த சிவில் சமூக இயக்கங்களை அழித்தொழிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கும் இந்த சிவில் சமூக இயக்கமானது தேசிய நிகழ்ச்சி நிரலை வகுப்பதோடு மட்டுமல்லாமல், மக்களோடு எட்டிக்கொண்ட அந்த சமூக ஒப்பந்தங்களை மக்கள் முன் கொண்டு சென்று, சமூக ஒப்பந்தத்தை வகுப்பதன் மூலம், அரசியல் இயங்கியலை வலுப்படுத்தும் விதமாக அமையும். இந்த இயக்கம் தலைநகரை மையமாகக் கொண்டு, உயர்வர்க்கத்தினரோடு மாத்திரம் சுருங்கிய சிவில் சமூக இயக்கமாக உருவாக்கப்பட மாட்டாது.
மாறாக 9 மாகாணங்கள், 25 மாவட்டங்கள் மற்றும் ஒவ்வொரு பிரதேச செயலக மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளுடனும் இணைந்த, பரந்த சிவில் சமூக இயக்கமாக கட்டியெழுப்பப்படும். 220 இலட்சம் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையாகவே இதனை நாம் பார்க்கிறோம். ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், திறமைகள் அடிப்படையிலான ஒழுங்கமைப்பு, வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்தல், பிற்போக்கான வரி அமலாக்கல் நடவடிக்கைகளால் கஷ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளான மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களை முன்னிலைப்படுத்திய இந்த சிவில் சமூக இயக்கத்தின் பூர்வாங்க குழு கூட்டத்தை அடுத்த மாதமும் கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இது கடந்த காலத்தில் உருவான சிவில் சமூக இயக்கங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகக் காணப்படும். இந்த மக்கள் பிரதிநிதித்துவம் தாம் பெற்ற மக்கள் ஆணையைப் பாதுகாக்கும் விதத்தில் நடந்து கொள்வதாக அமைய வேண்டும். லசந்த விக்ரமதுங்கவுக்காக கண்ணீர் சிந்திய இலட்சக்கணக்கான மக்கள் நாட்டில் இருக்கின்றனர். அவரது மரணத்தை பயன்படுத்தி அதிகாரத்துக்கு வந்த சகலரும் அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை உரியவாறு முன்னெடுக்காமலேயே சென்றனர். மரணம் தொடர்பான உண்மைக் காரணிகளை, அது சார்ந்த விசாரணை நடவடிக்கைகளைத் தேடாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இவ்வாறு மக்கள் மத்தியில் வாக்குறுதிகளை வீசி, பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையை கூச்சமின்றி மீறியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கும் சிவில் சமூக இயக்கம் மூலம் மக்கள் ஆணையை நாம் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம். 220 இலட்சம் மக்களுடன் கையெழுத்திடும் சமூக இணக்கப்பாட்டை, சமூக ஒப்பந்தத்தை உரியவாறு அமல்படுத்தும் சட்ட ரீதியான நடவடிக்கையாக இதனை மாற்றுவோம். பல சந்தர்ப்பங்களிலும் நாட்டு மக்களுக்கு, தாம் பெற்றுக் கொடுத்த மக்கள் ஆணையை மீறிய ஆட்சிகளை எதிர்கொள்ளவே நேர்ந்தது. மக்களின் உரிமைகளை மீறிய, மக்கள் ஆணையை பாரதூரமாக மீறிய, ஜனநாயக விரோதமான, மோசமான சர்வாதிகார ஆட்சியே தற்சமயம் நாட்டில் காணப்படுகின்றது என்றார்.





