1500 பாடசாலைகளை மூடுவதற்கு அரசு திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம்
2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று சுமார் 500 பாடசாலைகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் 50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட சுமார் 1500 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில், 22-01-2026அன்று கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் 50 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1506 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையினால் நாடு முழுவதும் சுமார் 48,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். நாடளாவிய ரீதியில் 1,506 பாடசாலைகளை மூடுவதன் மூலம் சுமார் 11,000 கல்விசார் ஊழியர்களின் பணிச்சூழல் பாதிக்கப்படும். இதில் 9,882 ஆசிரியர்களும்,1506 அதிபர்கள் மற்றும் பதில் கடமையாற்றும் அதிபர்களும் உள்ளடங்குவர்.
பாடசாலைகளை மூடும் இந்த திட்டத்தின் கீழ் வடமத்திய மாகாணத்தில் மாத்திரம் 159 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஏற்கனவே 8 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த நடவடிக்கை கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், 34/2025 எனும் சுற்றறிக்கையின் அடிப்படையில் குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று சுமார் 500 பாடசாலைகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அந்தப் பாடசாலைகள் சிதைந்து இயற்கையாகவே செயலிழந்துவிடும். அதனையே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் உடன்படிக்கையின்படி, நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வியை இலவசமாகவும், பாதுகாப்பாகவும் வழங்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உடன்படிக்கையிலிருந்து விலகி குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். இந்த திட்டத்தினால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நிலை முற்றாக பாதிக்கப்படும் என்றார்.





