தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்களின் உரிமம் இரத்து செய்யப்படும்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் இந்த நிபந்தனைகள் அமல்படுத்தப்படுவது அவசியமாகும்.
தவறான செய்திகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்களின் ஒளிபரப்பு உரிமத்தை மீளப் பெறுவதற்கு அல்லது இரத்து செய்வதற்கு ஊடக அமைச்சுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் போலியான அல்லது திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக ஊடக உரிம நிபந்தனைகள் மிக கடுமையாக அமல்படுத்தப்படும் எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் 29-12-2025 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறப்புரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில், தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான ஒளிபரப்பு உரிமம் என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் என்பவை வெறும் பொழுதுபோக்கிற்கானவை அல்ல; ஆகையால், மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் ஊடகங்கள் ஒருபோதும் செயற்பட முடியாது. நாட்டில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள், வானொலிகள் உள்ளிட்ட ஊடகம் சார்ந்த நிறுவனங்களுக்கு ஊடக அமைச்சினால் தற்காலிகமாகவே ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உரிமத்தைப் பெறும்போதும் அந்த நிறுவனங்களுக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, தேசிய பாதுகாப்பு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றுக்குக் கேடு விளைவிக்கும் அல்லது மக்களைப் பீதிக்குள்ளாக்கும் செய்திகளை வெளியிடும் பட்சத்தில், அந்த உரிமத்தை மீளப் பெறுவதற்கான முழு அதிகாரம் ஊடக அமைச்சுக்கு உண்டு. தற்போது வரை தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு அவற்றைச் சரி செய்யுமாறு கடிதம் மூலம் அறிவுறுத்தல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
எனினும், எதிர்வரும் காலங்களில் போலியான செய்திகள், திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராக உரிம நிபந்தனைகள் மிகக் கடுமையாக அமல்படுத்தப்படவுள்ளன குறிப்பாக பொது சுகாதாரம் குறித்துத் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை சிதையுமாயின், அதன் பின்னர் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
எனவே, ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் இந்த நிபந்தனைகள் அமல்படுத்தப்படுவது அவசியமாகும். இந்த நாட்டில் மிகவும் பிரபலமான இமியுனோகுலோபுலின் மருந்துகள் தொடர்பிலும் அண்மையில் ஊடகங்கள் வாயிலாக தவறான தகவல்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் கொள்முதல் சட்டங்களையும், விதிமுறைகளையும் மீறி மோசடியான முறையில் மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டன. அது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. மக்களுக்குச் சரியான சுகாதார தகவல்களைக் கொண்டு செல்வதில் ஊடகவியலாளர்கள் தார்மீகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.





