தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி அரசாங்கம் மௌனம் காப்பதேன்?: முஜிபுர் ரஹ்மான்
கடந்த காலங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்த போது அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த தற்போதைய ஆட்சியாளர்கள் இன்று மறைக்கும் எண்ணத்திலேயே மெளனமாக இருக்கின்றார்கள்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்குறுதிகளுக்கு மாறாக நிலக்கரி இறக்குமதியில் பாரிய ஊழல் ,மோசடி இடம்பெறுவதற்கு இடமளித்துள்ளது. இதன் காரணமாக இலங்கை மின்சார சபைக்கு சுமார் 7,672 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசாங்கம் இன்னமும் மௌனமாக இருப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 28-02-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இதுவரை 8 கப்பல்களில் நிலக்கரி கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த நிலக்கரி மிகவும் தரம் குறைந்ததாக காணப்படுவதாக மின்சார தெரிவித்துள்ளது.
இவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரமான நிலக்கரியை வழங்காமை மற்றும் குறித்த கால நேரத்திற்குள் அவற்றை இறக்குமதி செய்யாமை என்று குறித்த நிறுவனம் 2 முக்கிய ஒப்பந்த விதிகளை மீறியுள்ளது.
இவ்வாறான நிலையில் ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு வாய்ப்புக்கள் இருந்தும், அரசாங்கம் அதனை செய்யாமல் அதே நிறுவனத்திடம் மீண்டும் நிலக்கரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவது பெரும் சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.
மேலும், ஒரு மெற்றிக் தொன் நிலக்கரியை 60 முதல் 70 டொலர் வரை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பு உள்ள நிலையில் அரசாங்கம் ஒரு மெட்ரிக் டொன்னை 98 டொலர் வீதம் செலுத்தியுள்ளது. ஆனால் அந்த நிலக்கரியின் தரம் குறைந்ததாக காணப்படுகிறது. வரலாற்றிலேயே நாட்டின் அதிக பெறுமதியான நிலக்கரி விலை மனுக்கோரலில் பாரிய மோசடி ஏற்பட்டும் அரசாங்கம் மௌனமாக இருக்கிறது.
அத்துடன், தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டாலும், அதற்குப் பொறுப்பான அமைச்சர் பதவி விலக தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்த போது அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த தற்போதைய ஆட்சியாளர்கள் இன்று மறைக்கும் எண்ணத்திலேயே மெளனமாக இருக்கின்றார்கள்.
இன்னும் 20 கப்பல்கள் வரை நிலக்கரி வரவேண்டியுள்ளதால், இந்த மோசடியால் மின்சார சபைக்கு ஏற்படும் நட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே இது குறித்து ஜனாதிபதி உடனடியாக நியாயமான விசாரணையை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்கு முன்னர் தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்தார்.





