ஊழியர் சேமலாப நிதிய டிஜிட்டல் மயமாக்கலால் சேவை பெறுநர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு:பிரதி அமைச்சர் மஹிந்த
ஒரு சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலாக, 35 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டதாக தொழில் அமைச்சு பதிலளித்திருந்தது.
நாட்டில் கடந்த காலங்களில் சுமார் 22 000க்கும் அதிகமான நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியை வழங்காமல் இருந்தன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் வகையில் ஊழியர் சேமலாப நிதியம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்த இந்த விடயத்தில் சேவை வழங்குனர்கள், சேவை பெறுநர்களுக்கு காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதிய டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்வில் 29-12-2025அன்று கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், டிஜிட்டல் மயமாக்கலுடன் உலகம் மிகவும் வேகமாக முன்னோக்கிப் பயணிக்கின்றது. உலகத்துடன் ஒப்பிடுகையில் நாடு என்ற ரீதியில் நாம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றோம். எனவே தான் எமது அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்துகிறது. அதற்கமைய ஊழியர் சேமலாப நிதியத்துக்கான பதிவின் போது சேவை பெறுநர்கள் பெறும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
இங்கு பதிவு செய்வதற்கே கூடுதல் நேரம் செலவிடப்படும் நிலைமை காணப்பட்டது. அதேபோன்று சேவை வழங்குனர்களுக்கும் இதற்காக பெருமளவான நேரத்தை செலவிட வேண்டியேற்பட்டது. இதில் காணப்பட்ட தடைகள் இனி நீக்கப்படும். இது தொடர்பில் எமக்கு அன்றாடம் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் கூறப்பட்ட பிரச்சினைகளுக்கு இனி படிப்படியாக தீர்வு கிடைக்கும்.
ஒரு சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலாக, 35 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டதாக தொழில் அமைச்சு பதிலளித்திருந்தது. அதேபோன்று சுமார் 22 000க்கும் அதிகமான நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியை வழங்காமல் இருந்தன. இவ்வாறான பிரச்சினைகளுக்கும் இந்த டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தீர்வு கிட்டும்.
வெளிப்படை தன்மையுடன் இனி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 25 500 மில்லியன் ரூபா டிஜிட்டல் பொருளாதாரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக உலகத்துடன் இணைந்து டிஜிட்டல் மயமாக்கலுடன் எம்மாலும் முன்னேற முடியும். தொழிலாளர்கள் தமக்கான சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய சூழலை எமது அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது என்றார்.





