பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிலையியற் கட்டளைக்கு அமைய முன்னுரிமையை அளிப்போம்: அரசாங்கம்
வழமையாக வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் இந்த கூட்டம் நடத்தப்படும்.
கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு,பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சரும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அடுத்த பாராளுமன்ற அமர்வு வார நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் இந்த வாரத்தில் நடத்தப்படாமல் இருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சி பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் இரண்டு முக்கிய சட்டமூலங்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்தால் அதனை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டும். இதனாலும் அதேபோன்று நீங்கள் இப்போது நம்பிக்கையில்லா பிரேரரணையொன்றுக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி அதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது. இதனால் இந்த நேரத்தில் இந்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வு நடவடிக்கை தொடர்பான குழுக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழமையாக வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் இந்த கூட்டம் நடத்தப்படும். ஆனால் நான் குறிப்பிட்ட காரணங்களால் இந்த வாரத்தில் குறித்த கூட்டம் நடத்தப்படாது. எவ்வாறாயினும் அடுத்த அமர்வு வாரத்திற்கான விவாதங்களுக்குத் தயாராவதற்கு உறுப்பினர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில், பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான கூட்டம் விரைவில் திட்டமிடப்படும் என்றார்.





