14 வருடங்களின் பின்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு
இது எமது நிறைவேற்றுக்குழுவினால் மாத்திரம் தீர்மானம் மேற்கொள்ளப்படக்கூடிய விடயமல்ல.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 14 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக அதன் சகல உறுப்பினர்களுக்குமான ஒரு விசேட பொதுக்கூட்டத்தை இன்றைய தினம் நடாத்தவிருப்பதாக அறிவித்திருப்பதுடன், அதில் பங்கேற்குமாறு சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
அக்குரேகொட பகுதியில் 13-02-2026 அன்று சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இவ்விசேட பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக 14-02-2026 அன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று காலை கூடியதாகவும், இருப்பினும் இச்சம்பவம் ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதிக்கக்கூடிய விடயம் எனவும், ஆகவே இதுகுறித்து சங்கத்தின் நிறைவேற்றுக்குழு மாத்திரம் தீர்மானம் மேற்கொள்ளக்கூடாது எனவும் கருதியமையினாலேயே இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.
"இது ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதிக்கக்கூடிய சம்பவமாகும். இது எமது நிறைவேற்றுக்குழுவினால் மாத்திரம் தீர்மானம் மேற்கொள்ளப்படக்கூடிய விடயமல்ல. எனவே சட்டத்தரணிகள் சங்கத்தின் சகல உறுப்பினர்களுக்கும் இன்று பி.ப 3 மணிக்கு விசேட பொதுக்கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுவதற்கு தீர்மானித்திருக்கிறோம். இவ்விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்" என ரஜீவ் அமரசூரிய குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இவ்வாறானதொரு விசேட பொதுக்கூட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையிலேயே கூட்டப்பட்டதாகவும், 14 வருடங்களின் பின்னர் தற்போது மீண்டும் அவ்வாறானதொரு கூட்டத்துக்கு தாம் அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கான விசேட பொதுக்கூட்டம் இன்றைய தினம் பி.ப 3 மணிக்கு கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்க செயலகத்தின் கலாநிதி எச்.டபிள்யு.ஜயவர்தன கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.





