தித்வாவின் தாக்கங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா, கேகாலை மாவட்டத்தில் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 24-03-2026 அன்று களவிஜயம் மேற்கொண்டார்.
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை பின்னர் இன்னமும் சீரமைக்கப்படாத சேதமடைந்த வீதிகள், குடிநீர் மற்றும் மின்விநியோகத்தடை போன்ற இடையூறுகள் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்து பாதித்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா கவலை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்திருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா, கேகாலை மாவட்டத்தில் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 24-03-2026 அன்று களவிஜயம் மேற்கொண்டார்.
இதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மஸாட்டோ கன்டா, 'மண்சரிவுகள், சேதமடைந்த வீதிகள், குடிநீர் மற்றும் மின்விநியோகத்தடை போன்ற இடையூறுகள் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன' எனக் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, 'இந்த சூழல் உரிய நேரத்தில் வழங்கப்படவேண்டிய உதவிகளின் அவசியத்தைக் காண்பிக்கின்றன. சேதமடைந்த உட்கட்டமைப்புக்களை சீரமைக்கவும், சமூகங்களை மீண்டும் ஒன்றிணைக்கவும், மிகவும் அவசரத் தேவையுள்ள பகுதிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் அவசர கடனுதவியை வழங்கியிருக்கிறது. அவ்வுதவி மூலம் மக்களின் உடனடித்தேவைகளைப் பூர்த்திசெய்யவும், எதிர்காலப் பாதிப்புக்களை தாங்குவதற்கான திறனை வலுப்படுத்தவும் முடியும்' என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





