போலி கடவுச்சீட்டு வழக்கு; ஷஷி வீரவன்சவுக்கு முன் பிணை
விசாரணை முடியும் வரை தமக்கு முன்பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, அவரை முன் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் 20-08-2026 அன்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இதன்போது ஷஷி வீரவன்சவும் மன்றில் ஆஜராகியிருந்தார்.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் அடிப்படையில் ஷஷி வீரவன்ச குற்றவாளியாக காணப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல்நீதிமன்றம் நிராகரித்திருந்ததாக பிரதான நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இருப்பினும், மேல்நீதிமன்றத்தின் முடிவைச் சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக ஷஷி வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான உண்மைகளைப் பரிசீலிப்பதற்காக உயர்நீதிமன்றம் இந்த மேன்முறையீட்டை அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளதால், விசாரணை முடியும் வரை தமக்கு முன்பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 42 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு பிரதிவாதிக்கு உள்ள சட்டபூர்வ உரிமையின் அடிப்படையில் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இது குறித்து உயர்நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்துவதற்கு உட்பட்டு ஷஷி வீரவன்சவை முன் பிணையில் விடுவிக்கப் பிரதான நீதவான் உத்தரவிட்டதோடு அவ்வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் அறிவித்தார்.





