சபாநாயகருக்கு எதிராக பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தில் முறைப்பாடு - தயாசிறி ஜயசேகர
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களில் பணியாற்றி, சுமார் இருபது வருட பாராளுமன்ற சேவை அனுபவத்தைக் கொண்ட ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினராவேன்.
சபாநாயகருக்கு ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அவர் தொடர்ந்து பதவி வகிப்பது பாராளுமன்ற கோட்பாடுகள் மற்றும் இயற்கை நெறிமுறைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.பொருத்தமான பாராளுமன்ற பொறிமுறை வடிவில் சிறப்புரிமைப் பிரச்சினை தொடர்வதைத் தடுப்பதுஇ பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட பாராளுமன்றப் பாதுகாப்பு அரண்களையே பலவீனப்படுத்தக்கூடும். ஆகவே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்திடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகள், பாராளுமன்றத்திற்குள்ளான பேச்சுச் சுதந்திரம் மற்றும் பாராளுமன்ற நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் நடுநிலைமை ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடைய ஒரு விடயத்தை, பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களில் பணியாற்றி, சுமார் இருபது வருட பாராளுமன்ற சேவை அனுபவத்தைக் கொண்ட ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினராவேன். நான் முன்னதாக வடமேல் மாகாண முதலமைச்சராகவும், அமைச்சரவை அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியுள்ளேன். தற்சமயம் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறேன்.
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அவர் தொடர்ந்து பதவியில் வகிப்பது தொடர்பாக ஒரு சிறப்புரிமைப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.
இந்த சிறப்புரிமைப் பிரச்சினையானது நிறுவப்பட்ட பாராளுமன்ற சிறப்புரிமை பொறிமுறையின் மூலம் கையாளப்பட்டு,இறுதியாக நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவினால் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இருப்பினும், 2026.09.10 ஆம் திகதியன்று இவ்விடயத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க நான் அனுமதி கோரியபோது, சபாநாயகர் அதனைப் சமர்ப்பிக்க எனக்கு அனுமதி மறுத்ததுடன், இவ்விடயத்தை தானே நேரில் ஆய்வு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த முறைப்பாடானது சபாநாயகரின் நடத்தை மற்றும் அவரது பதவி நிலையை நேரடியாகப் பற்றியது என்பதால், இது கடுமையான கவலைக்குரிய ஒன்றாக அமைகிறது.யாரும் தனது சொந்த வழக்கில் தானே நீதிபதியாக இருக்க முடியாது' என்ற அடிப்படை விதியானது,ஒரு நபர் நேரடியாக சுய நலன் கொண்டுள்ள ஒரு விடயத்தில் அவரே தீர்மானம் எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது. தனக்கு எதிரான சிறப்புரிமை முறைப்பாடு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதில் சபாநாயகர் நேரடியாகத் தலையிடுவது, நிறுவனத்தின் நடுநிலைமை குறித்துத் தெளிவான மற்றும் கடுமையான கேள்வியை எழுப்புகிறது.
சிறப்புரிமை தொடர்பான கேள்விகளை பரிசீலிப்பதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு ஒன்று உள்ளது. எனது சிறப்புரிமைப் பிரச்சினையானது, இவ்விடயத்தை பரிசீலனைக்கும் விசாரணைக்கும் அக்குழுவிடம் ஒப்படைக்குமாறு குறிப்பாகக் கோருகிறது.எனவே, பொருத்தமான பாராளுமன்ற பொறிமுறை வடிவில் சிறப்புரிமைப் பிரச்சினை தொடர்வதைத் தடுப்பது, பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட பாராளுமன்றப் பாதுகாப்பு அரண்களையே பலவீனப்படுத்தக்கூடும். ஆகவே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன்.





