இலங்கைத் தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு
அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் 14 ஆம் திகதி தாய்லாந்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் 14 ஆம் திகதி தாய்லாந்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
தொழிலுக்கான புலம்பெயர்வு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தொழில்சார் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இலங்கைத் தொழிலாளர்களைத் தாய்லாந்தில் தொழில்களில் ஈடுபடுத்துவது தொடர்பான ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஐந்தாண்டு காலப்பகுதிக்கு அமலாகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் அமலுக்கு வருவதன் மூலம் இரு நாடுகளின் தொழில் துறை சார்ந்த உரிய அதிகாரிகளுக்கிடையில் வலுவான உத்தியோகபூர்வ தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்துதல், இலங்கைத் தொழிலாளர்களைத் தாய்லாந்துக்கு அனுப்புதல் மற்றும் திரும்ப அழைத்து வருதல் ஆகிய செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடனும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கான கட்டமைப்பு ரீதியான பொறிமுறையை நிறுவுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று தாய்லாந்தில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகள், நலனோம்புகை மற்றும் பாதுகாப்பை உறுதியாகப் பேணுதல் மற்றும் முறையற்ற வேலைவாய்ப்பு முகவர் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மனித கடத்தல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





