இலங்கைக்கான வத்திக்கான் தூதுவருக்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கடிதம்
இலங்கையில் இடம்பெற்ற மோதல் தனித்து உருவானதல்ல. மாறாக அதன் வேர்கள் பல தசாப்தகால அரசியல் புறக்கணிப்பு, திட்டமிடப்பட்ட பாகுபாடு மற்றும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகள் நிராகரிக்கப்பட்டமை என்பவற்றிலேயே புதைந்திருக்கின்றன.
உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆன்மீகக் கட்டமைப்பு என்ற வகையில் அனைத்து சமூகங்களினதும், குறிப்பாக மோதல்கள் மற்றும் இடப்பெயர்வுகளினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களுக்குச் செவிசாய்க்கவேண்டிய பொறுப்பு கத்தோலிக்க திருச்சபைக்கு உண்டு. தெரிவுசெய்யப்பட்ட வரலாற்று வாதங்களின் மீதோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் துயரமான அனுபவங்களைப் புறக்கணிப்பதன் மூலமோ உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது என இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் ஆன்ட்ரூ ஜோஸ்வோவிச்சுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்கள் மிகமோசமான துன்பங்களை அனுபவித்தமையை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை ஒப்புக்கொள்ளத் தவறியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப்போர் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூகத் தொடர்புகளுக்கான பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் கிருஷாந்த பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் பிரதிநிதிகளான சட்டத்தரணிகள் கே.எஸ்.இரத்னவேல், சுகந்தி இராஜகுலேந்திரா, வி.எஸ்.நிரஞ்சன், ஜி.சி.ரணித்தா மற்றும் எம்.ஜுட் டினேஷ் ஆகியோர் கையெழுத்திட்டு இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் ஆன்ட்ரூ ஜோஸ்வோவிச்சுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அண்மையில் கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூகத் தொடர்புகளுக்கான பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் கிருஷாந்த பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டதும், தேசிய கத்தோலிக்க ஆணைக்குழுவின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான பேரருட்திரு கலாநிதி ஜுட் நிஷாந்த சில்வாவினால் அங்கீகரிக்கப்பட்டதுமான கருத்து குறித்து நாம் எமது ஏமாற்றத்தையும், ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்துகிறோம்.
அக்கருத்து இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை 'பயங்கரவாதத்துக்கு எதிரானதொரு போர்' எனச் சித்தரிக்கிறது. இத்தகைய சித்தரிப்பானது ஒரு சிக்கலான வரலாற்று, அரசியல் மற்றும் மனிதாபிமானப் பேரழிவை ஒற்றை வாதமாகச் சுருக்குவதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அனுபவங்களையும், துயரங்களையும் முற்றாக புறக்கணிக்கும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் இடம்பெற்ற மோதல் தனித்து உருவானதல்ல. மாறாக அதன் வேர்கள் பல தசாப்தகால அரசியல் புறக்கணிப்பு, திட்டமிடப்பட்ட பாகுபாடு மற்றும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகள் நிராகரிக்கப்பட்டமை என்பவற்றிலேயே புதைந்திருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் படிப்படியான விளிம்புநிலையாக்கத்துக்கு வழிகோலிய வரலாற்று நிகழ்வுகள், அடிக்கடி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அரச கொள்கைகள் என்பன மோதலின் தோற்றம் குறித்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு நம்பகரமான பரிசீலனையிலும் உள்வாங்கப்படவேண்டும்.
1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தனிச்சிங்கள சட்டம், 1956 இலும் அதன் பின்னரும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், 1981 இல் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமை, 1983 இல் நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜுலை தமிழ் இனப்படுகொலைகள், தமிழ் மாணவர்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்திய முறையற்ற பல்கலைக்கழக அனுமதித் தரப்படுத்தல் கொள்கைகள், தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் மற்றும் சிங்களமயமாக்கல் கொள்கைகள் என்பனவும் இதில் அடங்கும்.
இந்த கூட்டு அநீதிகள், குறிப்பாக தமிழ் இளைஞர்களிடையே ஆழமான விரக்திக்கு வித்திட்டதுடன், ஆயுதப்போராட்டத்தின் எழுச்சிக்கும் பங்களிப்புச்செய்தன. மோதலில் ஈடுபட்ட சகல தரப்புக்களாலும் நிகழ்த்தப்பட்ட வன்முறைச்செயல்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, கண்டிக்கப்படவேண்டிய அதேவேளை, ஒட்டுமொத்த மோதலையும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு பிரச்சாரமாக மாத்திரமே சித்தரிப்பது வரலாற்று ரீதியாகத் தவறானதும், நெறிமுறை அடிப்படையில் வெறுக்கத்தக்கதுமாகும். அதுமாத்திரமன்றி இத்தகைய வாதம், மோதலுக்குக் காரணமான அரசியல், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான காரணிகளை உதாசீனம் செய்வதுடன், இலங்கையின் கடந்த காலம் பற்றிய உண்மையான புரிதல் ஏற்படுவதற்கும் தடையாக அமைகிறது.
அதேபோன்று 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்கள் மிகமோசமான துன்பங்களை அனுபவித்தமையை ஒப்புக்கொள்ளத் தவறியமையும் மிகுந்த கவலையளிக்கிறது. பெரும் எண்ணிக்கையான பொதுமக்களின் உயிரிழப்புகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் என்பன தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன.
இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகரமான ஆதாரங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் இலங்கை அரசினால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. போரின் முடிவில் கணக்கில் கொள்ளப்படாத சுமார் 146,000 பொதுமக்கள் தொடர்பான கரிசனைகளை மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.
இன்றும் தமது அன்புக்குரியவர்களின் நிலை என்ன என்பதற்கான பதில்களையும், அவர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலையும் தேடித்தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மத்தியில் இந்தக் கவலைகள் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
மோதலின்போது தமிழ்மக்கள் அனுபவித்த துயரங்களை வடக்கு, கிழக்கில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபைகள் தொடர்ந்து அங்கீகரித்து வந்திருக்கின்றன. வடக்கு, கிழக்கு ஆயர் பேரவை 2022 மே 16 ஆம் திகதியிடப்பட்ட அதன் கடிதத்தில், போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக மே 18 ஆம் திகதியை 'தமிழினப்படுகொலை நாள்' எனப் பிரகடனப்படுத்தியது.
இது பாதிக்கப்பட்ட சமூகங்களின் கூட்டுத் துயரம், அனுபவங்கள் மற்றும் நீதிக்கான தொடர்ச்சியான தேடலைப் பிரதிபலிக்கிறது. இலங்கை அரசாங்கமும் தென்னிலங்கை மக்களும் இந்த நாளை வெற்றி நாளாகக் கொண்டாடிய போதிலும், பெரும் எண்ணிக்கையான தமிழர்களுக்கு மே 18 என்பது துக்கத்துக்கும் நினைவுகூரலுக்கும் உரிய நாளாகும்.
உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆன்மீகக் கட்டமைப்பு என்ற வகையில் அனைத்து சமூகங்களினதும், குறிப்பாக மோதல்கள் மற்றும் இடப்பெயர்வுகளினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களுக்குச் செவிசாய்க்கவேண்டிய பொறுப்பு கத்தோலிக்கத் திருச்சபைக்கு உண்டு. தெரிவுசெய்யப்பட்ட வரலாற்று வாதங்களின் மீதோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் துயரமான அனுபவங்களைப் புறக்கணிப்பதன் மூலமோ உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது.
மாறாக, அதற்கு மோதலின் மூல காரணங்களை நேர்மையுடன் ஒப்புக்கொள்வதும், பாதிக்கப்பட்ட சகல சமூகங்களும் அனுபவித்த துயரங்களை அங்கீகரிப்பதும், இலங்கை மக்கள் அனைவரினதும் உரிமைகளுக்கான சமத்துவம் மற்றும் கண்ணியத்தினை அடிப்படையாகக்கொண்ட உண்மை, பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நிலையான அரசியல் தீர்வுக்கான அர்த்தமுள்ள முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதும் அவசியமாகும்.
அதன்படி மோதல் குறித்து சமநிலையானதும் வரலாற்று ரீதியானதுமான புரிதலுக்கு அழைப்புவிடுத்துள்ள யாழ் மறைமாவட்ட ஊடகப்பிரிவின் பணிப்பாளர் அருட்தந்தை அன்டன் ஸ்டீபன், அறிக்கைகளை வெளியிட்ட வடக்கு, கிழக்கு குருக்கள் மற்றும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவு என்பவற்றின் பிரதிநிதிகளுடன் நாம் உடன்நிற்கிறோம். அத்தோடு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும், இலங்கையின் வரலாறு குறித்து சகலரையும் உள்ளடக்கிய ஆலோசனையில் ஈடுபடவேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம். இது மோதலின்போது இடம்பெற்ற வன்முறைகளை மாத்திரமன்றி, அதற்குப் பங்களிப்புச்செய்த மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகள், வரலாற்று அநீதிகள் மற்றும் மனித அவலங்களையும் அங்கீகரிப்பதாக அமையவேண்டும்.
நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான பாதையானது எளிமைப்படுத்தப்பட்ட வாதங்களில் இல்லை. மாறாக அது உண்மை, கருணை, நீதி, பரஸ்பர புரிதல் மற்றும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் ஏற்பட்ட அழிவுகளுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றிலேயே தங்கியிருக்கிறது. கடந்த காலத்தை நேர்மையுடன் எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே உண்மையான நல்லிணக்கத்துக்கும், கூட்டு எதிர்காலத்துக்குமான அடித்தளத்தை நிறுவமுடியும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





