ஊடக நிறுவனங்களுக்கு அமைச்சர் நளிந்த எச்சரிக்கை
நாட்டு மக்கள் தகவல் தெரிந்துக் கொள்ளும் உரிமையை இந்த ஊடகங்கள் தவறாக பயன்படுத்தி இனவாதத்தை பரப்புகின்றன.
நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தோற்றுவித்து அதனூடாக தமது தனிப்பட்ட நிலைப்பாட்டை அடைந்துக் கொள்வதற்கு ஒருசில ஊடகங்கள் முறையற்ற வகையில் செயற்படுகின்றன. உண்மையில் அவர்கள் வெட்கமடைய வேண்டும். ஊடக சுதந்திரத்துக்குள் இருந்துக் கொண்டு போலியான விடயங்களை குறிப்பிட்டு, இனவாதத்தை பரப்ப இடமளிக்க முடியாது .இந்நிறுவனங்களுக்கு எதிராக நிறுவன கட்டமைப்பிலும், பொது சட்ட கட்டமைப்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-11-2025 அன்று நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பிரதான சிங்கள பத்திரிகை தனது பிரதான செய்தியில் ' பொலிஸ் சான்றிதழ் பெறுவதற்கு கிராம சேவகரின் சான்றிதழ் மாத்திரம் போதாது, சிவில் பாதுகாப்பு சபையின் சான்றிதழும் வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்திக்குரிய மூலம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்பதை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்தினார்.அதன் பின்னர் பத்திரிகையில் முன்பக்கத்தில் திருத்த செய்தியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதேபோல் இந்த பத்திரிகை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினம் பற்றியும் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. மாவீரர் தினத்தை உத்தேகமாக அனுஸ்டிக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அனுமதி வழங்கியதாகவும் போலியான செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த போலியான செய்திகளையும் பிரபல ஊடகவியலாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் சுவைபட பத்திரிகை விபர நிகழ்ச்சியில் குறிப்பிடுகிறார்கள். இந்த ஊடகம் பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
இந்த நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தோற்றுவித்து அதனூடாக தமது தனிப்பட்ட நிலைப்பாட்டை அடைந்துக் கொள்வதற்கு ஒருசில ஊடகங்கள் இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படுகின்றன. உண்மையில் இவர்கள் வெட்கமடைய வேண்டும்.
நாட்டு மக்கள் தகவல் தெரிந்துக் கொள்ளும் உரிமையை இந்த ஊடகங்கள் தவறாக பயன்படுத்தி இனவாதத்தை பரப்புகின்றன. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஊடக அடக்குமுறை, ஊடக சுதந்திரத்துக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடுவார்கள்.
ஊடக சுதந்திரத்துக்குள் இருந்துக் கொண்டு போலியான விடயங்களை குறிப்பிட்டு, இனவாதத்தை பரப்ப இடமளிக்க முடியாது .இவர்களுக்கு எதிராக நிறுவன கட்டமைப்பிலும், பொது சட்ட கட்டமைப்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





