இலங்கையில் 10 சதவீதமானோர் சிறுநீரக நோயாளர்கள்: விசேட வைத்திய நிபுணர் அனுபாமா த சில்வா
இன்றளவும் அதிக எண்ணிக்கையான சிறுநீரக நோயாளர்கள் நோயால் பாதிப்புக்குள்ளாகி நோயின் பின்தங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு வருகைத் தருவதை அவதானிக்க முடிகிறது.
நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சனத்தொகையில் சுமார் 10 சதவீதமானோர் சிறுநீரக நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதுடன், கண்டறியப்படாத நோயாளர்களும் சமூகத்தில் உள்ளனர். இன்றளவும் அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளர்கள் , நோயால் பாதிப்புக்குள்ளாகி நோயின் பின்தங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு வருகைத் தருவதாக மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சிறுநீரக நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அனுபாமா த சில்வா தெரிவித்தார்.
சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைத் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டும் நோக்குடன் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சனத்தொகையில் சுமார் 10 சதவீதமானோர் சிறுநீரக நோயாளர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் கண்டி மாவட்டத்தை பிரதானமாகக் கொண்டு பேராசிரியர் ஒருவர் ஆய்வொன்றை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த ஆய்வில் அப்பகுதியில் உள்ள 10 சதவீதமானோர் சிறுநீரக நோயாளர்களென தெரியவந்துள்ளது.
எனினும் கண்டறியப்படாத நோயாளர்களும் தற்போது சமூகத்தில் உள்ளனர். இன்றளவும் அதிக எண்ணிக்கையான சிறுநீரக நோயாளர்கள் நோயால் பாதிப்புக்குள்ளாகி நோயின் பின்தங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு வருகைத் தருவதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக வயது வந்தவர்களில் 15 சதவீதமானோர் சிறுநீரக நோயாளர்களர்களாக உள்ளனர். நாடளாவிய ரீதியில் நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட தொற்றாநோய்கள் வெகுவாக அதிகரித்துள்ளது. தொற்றாநோய் காரணமாக சிறுநீரக நோய்களுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய சுமார் 90 சதவீதமானோர் தொற்றாநோயால் ஏற்படும் சிறுநீரக நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எலிக்காய்ச்சலால் மற்றும் பாம்புக்கடிக்கு ஆளாகும் நபர்களுக்கும் நாளடைவில் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. ஆசிய நாடுகளில் அதிக நீரிழிவு நோயாளர் வீதத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொழும்பு, அனுராதபுரம், குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் அதிகளவான சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர். நாளுக்கு நாள் மாற்றமடைந்து வரும் வாழ்க்கை நடைமுறை காரணமாக சிறுநீரக நோய்களுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
மேலும் வாய்வழியாக உள்ளெடுக்கப்படும் சருமபொலிவு, சருமத்தை வெண்மையாக்கல் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து என கூறப்படும் மருந்துகளால் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. 40 தொடக்கம் 50 வயதுக்குட்பட்டவர்களே சிறுநீரக நோயால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்றார்.





