முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் தலா 50 இலட்சம்
25 000 ரூபா ஆரம்பகட்ட கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய 450 225 வீட்டு அலகுகள் அடையாளங் காணப்பட்டன.
தித்வா புயலால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் தலா 50 இலட்சம் ரூபா வழங்கப்படும். அத்தோடு பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு சேத மதிப்பீடு இன்றி 5 இலட்சம் ரூபா வழங்கப்படுவதோடு, சேத மதிப்பீடுகளுக்கமைய அந்த தொகை 25 இலட்சம் வரை அதிகரிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக மீள் குடியேற்றப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு 30-12-2025 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில்,
இதுவரையில் 6090 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இரு முறைமைகளின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். முதலாவது முறைமை சேதமடைந்த வீடு அமைந்துள்ள காணியில் அபாயமின்றி தொடர்ந்தும் வாழ முடியுமெனில் அவ்வாறானவர்களுக்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
இந்த கொடுப்பனவு குறித்த வீட்டின் பெறுமதி மதிப்பீடு இன்றி வழங்கப்படும். இரண்டாவது முறைமையின் கீழ் வீடு முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை, அந்த வீட்டில் மீண்டும் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டால் காணியொன்றைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் மாவட்ட செயலாளர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி முதலிரு வாரங்கள் நிறைவடைய முன்னர் இந்த இழப்பீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும்.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக 25 இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்கப்படும். பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் சேத மதிப்பீடுகள் இன்றி 5 இலட்சம் வழங்கப்படும். அதன் பின்னர் சேத மதிப்பீடுகளுக்கமைய அந்த தொகை 25 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படும்.
அரச அதிகாரிகளால் சேத மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படும் போது, அது குறித்து திருப்தியடையாதவர்கள் பிரதேச செயலாளர்கள் அல்லது அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்க முடியும். உலக வங்கியின் ஆரம்ப கட்ட மதிப்பாய்வுகளுக்கமைய 4.1 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 000 ரூபா ஆரம்பகட்ட கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய 450 225 வீட்டு அலகுகள் அடையாளங் காணப்பட்டன. அவற்றில் இதுவரையில் 393 669 வீட்டு அலகுகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. கண்டி, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களிலும் 80 - 90 சதவீதம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் பலவந்தமாக இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் தயாராக இல்லை. குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக மீள் குடியேற்றப்படுவர் என்றார்.





