ஐ.தே.க. - ஐ.ம.ச. இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக தயார்; மரிக்கார் எம்.பி.
சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்பவே வரவு - செலவு திட்டமும் முன்வைக்கப்படும் என்றே தோன்றுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து ஒரே சின்னத்தில் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கத் தயார். இரு கட்சிகளும் இணையாமல் என்னிடம் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்க மாட்டேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 31-10-2025அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு வரி குறைப்பினை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் படுதோல்வியடைந்துள்ளதால் அந்த தீர்மானத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்பவே வரவு - செலவு திட்டமும் முன்வைக்கப்படும் என்றே தோன்றுகிறது.
எனவே அரசாங்கம் அதனை சுய பரிசோதனை செய்து கொள்வதே சிறந்ததாகும். அதற்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒரே மேடையில் இணைந்து ஒரே சின்னத்தில் களமிறநங்கினால், கட்சி என்னிடம் கோரினால் எனக்கு வாக்களித்த வாக்காளர்கள் ஆணை வழங்கினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராக உள்ளேன். கட்சி என்னிடம் கோரிக்கை விடுக்காமல் பலவந்தமாகச் சென்று தேர்தலில் போட்டியிட நான் தயாராக இல்லை. குறிப்பாக ஐ.தே.க.வுடன் இணையாமல், கட்சி என்னிடம் கோரிக்கை முன்வைத்தால் அதை ஏற்க மாட்டேன்.
இரு கட்சிகளும் பிளவடைந்தததால் பயன்படுத்தப்படாமலுள்ள வாக்குகள் பல இலட்சம் உள்ளன. எனவே நாம் மீண்டும் இணைந்தால் அந்த வாக்குகளை மீளப் பெற முடியும். நவம்பர் 21ஆம் திகதி இடம்பெறும் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது. கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது குறித்து உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த மேடையில் ஏறுகின்றவர்களைப் போன்றே நாமும் அரசாங்கத்துக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் அது அரசியல் கூட்டமொன்றாகும். எமது கட்சிக்கென தனித்துவத் தன்மையொன்று காணப்படுகிறது. அந்த வகையில் எமது தனித்துவத்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு நாம் அந்த கூட்டத்தில் பங்கேற்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
ஐ.தே.க. தவிர வேறு எந்தவொரு கட்சியையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தவில்லை. கீழ் மட்டத்தில் இதுவரையில் அவ்வாறானதொரு கோரிக்கை முன்வைக்கப்படவுமில்லை. கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புக்களுக்கமையவே நாம் தீர்மானங்களை எடுப்போம்.
ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அதனை எதிர்ப்பவர்கள் அரசியல் ரீதியில் அழிவையே சந்திப்பர். எனவே ஏனையோர் கூறும் விடயங்கள் தொடர்பில் நாம் கவனத்தில் கொள்வதில்லை என்றார்.





