சிறுவர்களின் உடனடி தேவைகளை பூர்த்திசெய்ய மேலும் நிதியுதவி தேவை: யுனிசெப் அமைப்பு
8,989 பேருக்கு அவசியமான போசணைசார் உதவிகளும் ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் 4,550 பேர், கர்ப்பிணித்தாய்மார் 2,557 பேர் மற்றும் பாலூட்டும் தாய்மார் 2,073 பேருக்கு அவசியமான உணவு உதவிகளும் வழங்கப்பட்டன.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கும், குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்குவதற்கு எமது அமைப்புக்கு 7.8 மில்லியன் டொலர் நிதி அவசியமாகும். இருப்பினும் கடந்த 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2.5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி மாத்திரமே கிடைக்கப்பெற்றிருப்பதுடன், 3.5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பேரனர்த்தம் இடம்பெற்று 28-12-2025 ஒரு மாதம் பூர்த்தியடையவுள்ள நிலையில், இவ்வனர்த்தத்தினால் குறிப்பாக சிறுவர்கள் முகங்கொடுத்திருக்கும் பாதிப்புக்கள் மற்றும் தற்போதைய மனிதாபிமான நிலைவரம் தொடர்பான தமது 5 ஆவது மதிப்பீட்டு அறிக்கையை யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளின் முக்கியமான விடயங்கள் வருமாறு:
தற்போதைய சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் சுமார் 12 இலட்சம் பேர் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதுடன், அவர்களில் 527,000 பேர் சிறுவர்களாவர்.
அதற்கமைய யுனிசெப் அமைப்பு அதன் ஏனைய கிளை அமைப்புக்களுடன் இணைந்து இதுவரையில் சுமார் 76,600 பேருக்கு அவசியமான நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கியிருக்கின்றது. அதேபோன்று 8989 பேருக்கு அவசியமான போசணைசார் தேவைகளையும், 5675 சிறுவர்களுக்கான பாதுகாப்புசார் தேவைகளையும் பூர்த்திசெய்திருக்கின்றது.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும், குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்குவதற்கு யுனிசெப் அமைப்புக்கு 7.8 மில்லியன் டொலர் நிதி அவசியமாகும். இருப்பினும் கடந்த 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2.5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி மாத்திரமே கிடைக்கப்பெற்றிருப்பதுடன், 3.5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 35 சிறுவர்நேய நிலையங்களில் உள்ள 3424 சிறுவர்களுக்கும், 1246 சிறுவர் பராமரிப்பாளர்களுக்கும் அவசியமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டன.
அதேபோன்று 8,989 பேருக்கு அவசியமான போசணைசார் உதவிகளும் ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் 4,550 பேர், கர்ப்பிணித்தாய்மார் 2,557 பேர் மற்றும் பாலூட்டும் தாய்மார் 2,073 பேருக்கு அவசியமான உணவு உதவிகளும் வழங்கப்பட்டன.
அதுமாத்திரமன்றி பேரனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிப்படைந்த பகுதிகளைச்சேர்ந்த மிதமான-கடுமையான மந்தபோசணை குறைபாட்டுக்கு ஆட்பட்டுள்ள 5 வயதுக்குக் குறைந்த 3,000 சிறுவர்களுக்கு அவசியமான உணவாக உட்கொள்ளத்தக்க போசணை மருந்துகள் வழங்கப்பட்டன. அத்தோடு தீவிர மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டுள்ள 200 சிறுவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.





