நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்காக 450 மில்லியன் டொலர் நிதியளிப்பை அறிவித்தது இந்தியா
இலங்கை சுற்றுலாத்துறை பொருளாதாரத்தை மையமாகக்கொண்டிருக்கின்றது. எனவே நாம் இந்தியாவில் இலங்கைக்கான சுற்றுலாவை ஊக்குவிப்போம் என உத்தரவாதமளிக்கின்றோம்.
இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக 450 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாகவும், இந்நிதியளிப்பில் 350 மில்லியன் டொலர் இலகு கடனும், 100 மில்லியன் டொலர் நிதியுதவியும் உள்ளடங்குவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான செய்தியுடன் நாட்டுக்கு வருகைதந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், முன்னர் எப்போதையும் விட, இப்போது இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கும் என உறுதியளித்துள்ளார்.
இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் 23-12-2025 அன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடினார். அவரைத்தொடர்ந்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தையும் சந்தித்துப்பேசிய ஜெய்சங்கர், அதனையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டு ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டார். அச்சந்திப்பில் ஜெய்சங்கர் வெளியிட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
நான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான செய்தியுடன் இங்கு வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று (நேற்று) காலை நானும் ஜனாதிபதியும் 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினோம். என்னால் கையளிக்கப்பட்ட பிரதமர் மோடியின் கடிதத்தில், மீள்கட்டியெழுப்பல் நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
உங்களது நெருங்கிய அயல்நாடு என்ற ரீதியிலும், எமது 'அயலகத்துக்கு முதலிடம்' மற்றும் 'மகாசாகர்' கொள்கைகளுக்கு அமைவாகவும், இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் சந்தர்ப்பத்தில் இந்தியா உடனடியாக உதவ முன்வருவது இயல்பான விடயமாகும். நீங்கள் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையிலும் நாம் இதனைச் செய்தோம். இருப்பினும் 'தித்வா' சூறாவளி அனர்த்தத்தின்போது, அந்த அனர்த்த நிலைமையைக் கையாள்வதிலும் இந்தியா வலுவான ஒத்துழைப்பை வழங்கியது.
'தித்வா' சூறாவளியை அடுத்து மண்சரிவு அனர்த்தம் பதிவான முதலாவது தினத்திலேயே இந்தியாவின் உதவி மற்றும் நிவாரண வழங்கல் திட்டமான 'ஒப்பரேஷன் சாகர் பந்து' ஆரம்பமானது. அவ்வேளையில் கொழும்பில் தரித்துநின்ற ஐ.என்.எஸ் விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ் உதயகிரி ஆகிய கப்பல்கள் இலங்கைக்கு அவசியமான உடனடி நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டதுடன் , அதனைத்தொடர்ந்து ஹெலிகொப்டர்களும் அனுப்பிவைக்கப்பட்டன. குறிப்பாக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ-17 எனும் இலக்க ஹெலிகொப்டர்கள் இலங்கையில் சுமார் இருவாரகாலமாகத் தொடர் பணிகளில் ஈடுபட்டிருந்தன. அதேபோன்று தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 80 பேர் கொண்ட குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண வழங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 85 மருத்துவப் பணியாளர்களை உள்ளடக்கிய இந்திய இராணுவத்தினரால் கண்டிக்கு அண்மையில் நிறுவப்பட்ட கள மருத்துவமனை ஊடாக பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 8000 க்கும் அதிகமானோருக்கு அவசியமான உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
அதேவேளை இவ்வனர்த்தத்தினால் ஏற்பட்ட பாரியளவான சேதங்களுக்கு மத்தியில், போக்குவரத்து உள்ளடங்கலாகத் துண்டிக்கப்பட்ட இணைப்புக்களை மீளப்புதுப்பிப்பதே முன்னுரிமைக்குரிய விடயமாகக் காணப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின்போதும் இதுபற்றிப் பேசப்பட்டது. அதற்கமைய பெரும் எண்ணிக்கையான இராணுவப் பொறியியலாளர்களின் பங்கேற்புடன் கிளிநொச்சியில் 'பெய்லி' பாலம் நிறுவப்பட்டது. மற்றுமொரு 'பெய்லி' பால நிர்மாணப்பணிகள் சிலாபத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி 'ஒப்பரேஷன் சாகர் பந்து' உதவித்திட்டத்தின் ஊடாக இதுவரையில் உலர் உணவுப்பொருட்கள், கூடாரங்கள், சுகாதார உபரணங்கள், உடைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் என்பன உள்ளடங்கலாக 1100 தொன்களுக்கும் மேற்பட்ட நிவாரண உதவிப்பொருட்களும், சுமார் 14.5 தொன் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி மீட்புப்பணிகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அவசியமான சுமார் 60 தொன் உபகரணங்கள் இங்கு கொண்டுவரப்பட்டன.
இலங்கையை உடனடியாக மீளக்கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் பிரகாரம் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பைப்பேணி, தற்போது முக்கியத்துவம் வழங்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அதற்கமைய தற்போது நாம் அறிவித்திருக்கும் 450 மில்லியன் டொலர் நிதியளிப்பில் 350 மில்லியன் டொலர் இலகு கடனும், 100 மில்லியன் டொலர் நிதியுதவியும் உள்ளடங்குகின்றன. இலங்கை அரசாங்கத்துடனான நெருக்கமான கலந்துரையாடல்களின் பின்னரேயே இந்தத் தொகை இறுதிப்படுத்தப்பட்டது.
எமது இந்த உதவி சேதமடைந்த வீதிகள், தண்டவாளங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட இணைப்புக்களைப் புனரமைத்தல், முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை மீள நிர்மாணித்தல், சுகாதாரம் மற்றும் கல்விக் கட்டமைப்புக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கல், விவசாயத்துறையை மீளக்கட்டியெழுப்பல், செயற்திறன்மிக்க பேரிடர் துலங்கல் மற்றும் முன்னாயத்த கட்டமைப்பை நிறுவுதல் என்பன உள்ளடங்கலாக 'தித்வா' சூறாவளியினால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட துறைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச்செய்யும்.
அத்தோடு இப்பேரனர்த்தத்தினால் மக்கள்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை இயலுமானவரை விரைவாக முன்னெடுக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதனை இலக்காகக்கொண்ட செயற்திறன்மிக்க ஒருங்கிணைப்புப் பொறிமுறை தொடர்பில் ஆராய்ந்துவருகின்றோம்.
மேலும் இலங்கை சுற்றுலாத்துறை பொருளாதாரத்தை மையமாகக்கொண்டிருக்கின்றது. எனவே நாம் இந்தியாவில் இலங்கைக்கான சுற்றுலாவை ஊக்குவிப்போம் என உத்தரவாதமளிக்கின்றோம். அதேபோன்று இக்கடினமான சூழ்நிலையில் அதிக இந்திய நேரடி முதலீடுகளும் உங்களது பொருளாதாரத்துக்குப் பேருதவியாக இருக்கும் என நம்புகின்றோம்.
இது இலங்கைக்கு மிகவும் கடினமான தருணமாகும். 2022 ஆம் ஆண்டு உருவான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைந்துவரும் இலங்கைக்கு, இந்தப் பேரனர்த்தம் புதிய சவால்களைத் தோற்றுவித்துள்ளது. இருப்பினும் கடந்த காலங்களில் அத்தகைய சவால்களிலிருந்து மீள்வதற்கு இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மீண்டெழும் தன்மையையும், உறுதிப்பாட்டையும் நாம் பார்த்திருக்கின்றோம். இவ்வாறானதொரு பின்னணியில் முன்னர் எப்போதையும் விட, இப்போது இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கும் என உறுதியளிக்கின்றேன் என்றார்.





