வாகன விலை அதிகரிக்காது என்பது வேடிக்கையான கூற்று - எதிர்க்கட்சி தலைவர் சஜித்
பொருட்களின் விலை உயர்வால் மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன், பிள்ளைகளுக்கு நல்ல உணவை வழங்கி ஆரோக்கியமான வாழ்க்கையைக்கூட கொடுக்க முடியாத கடுமையான சவாலுக்கு ஆளாகியுள்ளனர்.
வாகனங்களுக்கான இறக்குமதி மீது 50 வீத மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ள பின்னணியில், இந்த வரி விதிப்பினால் வாகனங்களின் விலைகள் அதிகரிக்காது என பிரதி நிதி அமைச்சர் கூறுவது வேடிக்கையானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராம பகுதியில் 16-05-2026அன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் விட்ஸ் ரக காரொன்றை 12 இலட்சம் ரூபாவிற்கு வழங்குவதாக தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் உறுதியளித்திருந்த போதிலும், இன்று வாகனங்களுக்கான இறக்குமதி மீது 50 வீத மேலதிக வரியை விதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இனிமேலும் இவ்வாறான நகைச்சுவையான கதைகளை நாட்டிற்கு முன்வைக்காமல், மக்களின் தரப்பிலிருந்து பொருளாதாரத்தை முறையான வழியில் நிர்வகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பொறுப்பை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும் அரசாங்கத்தின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வருவதால் பணவீக்கம் அதிகரித்து, பொருட்களின் விலைகளும் செலவினங்களும் உயர்ந்து மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் சீர்குலைந்து வருகின்றது. ரூபாவின் வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களை அதிகரித்தல் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற நடவடிக்கைகள் அத்தியாவசியமானவையாகும். ஆனால் தற்போதைய ஜனாதிபதிக்கும், நிதி அமைச்சருக்கும் மற்றும் அரசாங்கத்துக்கும் பொருளாதாரக் கொள்கைகள் அல்லது பொருளாதாரம் பற்றிய அடிப்படை புரிதலோ அறிவோ இல்லை என்பதால், நாளாந்தம் எடுக்கப்படும் தவறான பொருளாதாரத் தீர்மானங்களினால் நாட்டு மக்களுக்கே பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான யுத்த மோதல்கள் உருவான காலத்திலேயே, அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார சவால்களுக்கு அரசாங்கம் தயாராகியிருக்க வேண்டும். அவ்வாறு திட்டமிட்டிருந்தால் இன்று ரூபாய் இவ்வளவு வேகமாக வீழ்ச்சியடைந்திருக்காது. எனவே, மக்களின் மீதான அழுத்தங்களைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை குறைக்காமல் மேலும் வலுப்படுத்த வேண்டும். பொருட்களின் விலை உயர்வால் மக்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன், பிள்ளைகளுக்கு நல்ல உணவை வழங்கி ஆரோக்கியமான வாழ்க்கையைக்கூட கொடுக்க முடியாத கடுமையான சவாலுக்கு ஆளாகியுள்ளனர்.
அதேபோன்று வெளிநாட்டு கையிருப்புகளை வலுவான நிலையில் பேண வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன் மறுசீரமைப்புக்கான புதிய உடன்படிக்கைக்கு அரசாங்கம் செல்லாததால், ஆண்டுதோறும் பில்லியன் கணக்கிலான டொலர் கடனைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதுடன், மக்கள் வாழ்வதற்கு தேவையான அதிகபட்ச ஆதரவையும் அரச தலையீட்டையும் அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.





