சமஷ்டி என்பது பிரிவினை அல்ல - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டு
லண்டனில் அவர் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருடன் உரையாடிய எரிக் சொல்ஹெய்ம், அன்ரன் பாலசிங்கம் மிகுந்த மனச்சோர்வுடனும் ஏமாற்றத்துடனுமே உயிரிழந்ததாக என்னிடம் கூறினார்.
'சமஷ்டி' என்பது பிரிவினை அல்ல. மாறாக அது ஒரு பரந்துபட்ட அரசியல் தத்துவமாகும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இலங்கையில் சமஷ்டி கொள்கையின் தோற்றம் இனத்துவத்துடன் தொடர்புறாத விடயங்களையே மையப்படுத்தியிருந்ததாகவும், குறிப்பாக ஆரம்பத்தில் அது தமிழர்களின் அபிலாஷைகளை விட, கண்டிச் சிங்களவர்களின் அபிலாஷைகளையே பிரதிபலித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 2000 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சார்பில் தான் சமர்ப்பித்த அரசியலமைப்பு வரைவானது சமஷ்டி முறைமை சார்ந்த மிக விரிவான முன்மொழிவுகளை உள்ளடக்கியிருந்ததாகவும், இருப்பினும் அம்முன்மொழிவுகளை அரசியலமைப்புத் தீர்வாக நடைமுறைப்படுத்துவதற்கு விடுதலைப்புலிகள் காண்பித்த எதிர்ப்பு, நீலன் திருச்செல்வத்தின் கொடூர படுகொலையின் மூலம் வெளிப்பட்டதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு 27-04-2026 அன்று யாழ் மத்திய கல்லூரி, தந்தை செல்வா கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் 'சமஷ்டி முறைமையும் அரசியலமைப்புச் சீர்திருத்தப் பாதையும்' எனும் தலைப்பில் ஆற்றிய நினைவுப்பேருரையிலேயே பீரிஸ் மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தந்தை செல்வாவின் அரசியல் நம்பிக்கைகளின் மையமாக சமஷ்டி கொள்கை மீதான அவரது தளராத உறுதிப்பாடு இருந்தது. அதன்படி 1949 டிசம்பர் 18 ஆம் திகதி 'இலங்கைத் தமிழரசுக்கட்சி' அல்லது 'சமஷ்டி கட்சி' உருவாக்கப்பட்டமை அவரது வாழ்வில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இருப்பினும் எமது நாட்டில் சமஷ்டி கொள்கையின் தோற்றமானது பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இனத்துவத்துடன் தொடர்புறாத விடயங்களையே மையப்படுத்தியிருந்தது. குறிப்பாக இது ஆரம்பத்தில் தமிழர்களின் அபிலாஷைகளை விட, கண்டிச் சிங்களவர்களின் அபிலாஷைகளையே பிரதிபலித்தது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்கையை முடித்து நாடு திரும்பிய இலங்கை தேசிய காங்கிரஸின் முக்கிய உறுப்பினரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சமஷ்டி கொள்கையின் தீவிர ஆதரவாளராக விளங்கினார். அவர் சமஷ்டி கொள்கையை 'எமது அரசியல் பிரச்சினைகளுக்கு இருக்கும் ஒரே தீர்வு' என வர்ணித்தார்.
மார்க்சிஸ - லெனினிஸ கண்ணோட்டத்திலிருந்தும் சமஷ்டி கொள்கை ஒரு வலுவான கருத்தியல் ஈர்ப்பைக் கொண்டிருந்தது. 1944 ஒக்டோபர் 18 ஆம் திகதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினால் இலங்கை தேசிய காங்கிரஸிடம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவுகள் மிக ஆழமானவையாகும். அவை சிங்களவர்களையும் தமிழர்களையும் 'இரு தனித்துவமான தேசங்கள்' அல்லது 'வரலாற்று ரீதியான உருவான தேசிய இனங்கள்' என்று கருதின. அந்த முன்மொழிவுகளில் 'இரண்டு தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவர்கள் விரும்பினால் தமக்கெனத் தனி சுதந்திர அரசை அமைத்துக்கொள்ளும் உரிமையும் இதில் அடங்கும்' என்ற கூற்று மிகமுக்கியமானதாகும்.
1944 டிசம்பரில் நாட்டுக்கு வருகைதந்த சோல்பரி ஆணைக்குழு, 'இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கும், பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையிலான உறவானது இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் உள்ள பல சிக்கலான பிரச்சினைகளில் மிகவும் கடினமான ஒன்றாகும்' என்பதை அங்கீகரிப்பதில் எவ்வித தயக்கத்தையும் காண்பிக்கவில்லை.
இருப்பினும் டொனமூர் ஆணைக்குழுவைப் பொன்று சோல்பரி ஆணைக்குழு சமஷ்டி ஆட்சி என்ற கருத்தாக்கத்தில் விருப்பம் கொண்டிருக்கவில்லை. அரசியல் கட்டமைப்பின் ஒற்றுமை தொடர்பில் அவர்கள் கொண்டிருந்த கடப்பாடே அதற்கான முக்கிய காரணமாகும். சோல்பரி ஆணைக்குழு பரிந்துரைத்த தீர்வின் சாராம்சம், சுதந்திர அரசியலமைப்பின் 29(2) ஆம் பிரிவில் உள்வாங்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் அதிகார வரம்பின் மீது கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பு வரம்பாகும். அதாவது சட்டத்தின்கீழ் சமமான பாதுகாப்பை வெளிப்படையாக அங்கீகரிப்பதன் மூலம் இன, மத சமூகங்களுக்கு எதிரான பாகுபாடற்ற கொள்கையை சட்டமாக்குவதாகும். இருப்பினும் இவ்விடயத்தில் ஏற்பட்ட தோல்வி, சீரமைக்கமுடியாத ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக 1948 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் ஒரு புதிய வரைவிலக்கணத்தின் மூலம் இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிக்க முயன்றபோது, அது அனுமதிக்கப்படமுடியாத பாகுபாடு எனும் அடிப்படையில் நீதிமன்றங்களிடமிருந்து எவ்வித பாதுகாப்பும் கிடைக்கவில்லை.
நீதித்துறை விலகலினால் உணரப்பட்ட சிறுபான்மையின உரிமைகளின் பலவீனமானது, சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை மேலோங்க முக்கிய காரணமாக அமைந்தது. அதன்விளைவாக உருவான சந்தேகமும் விரக்தியும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களுக்கு வழிகோலின.
அதன் நீட்சியாக முக்கிய திருப்புமுனையாக அமைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உருவாக்கம் மற்றும் 1951 ஏப்ரலில் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏழு தீர்மானங்களைத் தொடர்ந்து, அதுவரை ஒற்றையாட்சி முறைமைக்குள் கணிசமான அதிகாரப்பகிர்வு கோரப்பட்டுவந்த நிலை மாறி, ஒரு சமஷ்டி முறைமைக்கான கடுமையான கோரிக்கை உருப்பெற்றது. இது காலப்போக்கில் பிரிவினைவாதத்துக்கான கூறாக விரிவடைந்தது. தமிழ்த் தலைமைகள் பிரிவினைக்கு அழைப்புவிடுப்பதற்கு மேலும் சில ஆண்டுகள் இருந்த நிலையில், அடுத்தடுத்த தசாப்தங்களில் அதிகாரப்பகிர்வு தொடர்பான சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வௌ;வேறு அரசாங்கங்களினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அம்முயற்சிகள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாக மிதவாதப்போக்கைத் தக்கவைப்பதற்குத் தமிழர் தரப்புக்கள் போராடிக்கொண்டிருந்த ஒரு சூழலில், தீவிரவாதக்குழுக்களின் அழுத்தம் தவிர்க்கமுடியாததாக மாறியிருந்தது. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை மற்றும் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை பேரழிவுகள் உள்ளிட்ட துயரமான நிகழ்வுகளுக்கு முன்னால் இந்த முயற்சிகள் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை.
செல்வநாயகத்தின் அரசியல் வாழ்வின் அடிப்படையாக விளங்கிய விழுமியங்களுடன் ஒருங்கிணைந்ததாகக் காணப்பட்ட சமஷ்டி தத்துவத்தை எளிதில் வரையறுத்துவிடமுடியாது. இலங்கையின் அமைதிப்பேச்சுவார்த்தை செயன்முறைக்கு சர்வதேச மத்தியஸ்தம் வகித்த நோர்வே அரசாங்கம், சமஷ்டி முறைமையின் நுணுக்கங்கள் பற்றிய புரிதலை விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு ஏற்படுத்துவதைத் தமது பிரதான பணியாகக் கருதியது. அதற்கென விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுக் குழுவினருக்கு நோர்டிக் நாடுகளில் விரிவான பயணங்களுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படும் கருணாவின் வெளியேற்றத்தின் பின்னர், வன்னி காடுகளுக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை இந்தப் பயணங்களே தனக்கு உணர்த்தியதாகக் கருணா குறிப்பிட்டார்.
'சமஷ்டி' என்பது ஒரு பிளவு அல்ல. மாறாக அது ஒரு பரந்துபட்ட அரசியல் தத்துவமாகும். 1995 - 1997 வரையான காலப்பகுதியில் சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட மூன்று அரசியலமைப்பு முன்மொழிவுகளில் இது தெளிவாக வெளிப்பட்டது. இவ்வேளையில் எனது நண்பர் நீலன் திருச்செல்வத்தின் பங்களிப்பை நினைவுகூர விரும்புகிறேன். தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏகபோக உரிமை தமக்கே உண்டு என்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நிலைப்பாட்டுக்குத் தடையாகத் திகழ்ந்தமையினால் அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால், எதிர்காலம் ஒருவேளை வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும். அதன்படி 1995 இல் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவுகள் சமஷ்டி முறைமையின் வலுவான அம்சங்களைக் கொண்டிருந்தன. இலங்கையின் அரசியலமைப்பு சார்ந்த பரிணாம வளர்ச்சியில் சமஷ்டி கட்டமைப்பை நோக்கிய மிகவும் வலுவான நகர்வாக இந்த ஆவணம் அமைந்திருந்தது.
அரசியலமைப்புத்திருத்தம் சார்ந்த மிக விரிவானதும், முழுமையானதுமான முன்மொழிவு 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3 ஆம் திகதி ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சார்பில் அரசியலமைப்பு விவகார அமைச்சராக நான் சமர்ப்பித்த அரசியலமைப்பு வரைவில் உள்வாங்கப்பட்டிருந்தது. அதில் 'சமஷ்டி' என்ற சொல் நேரடியாகப் பயன்படுத்தப்படாத போதிலும், அதன் சாராம்சம் உள்வாங்கப்பட்டிருந்தது. இலங்கை குடியரசு என்பது மத்திய மற்றும் பிராந்தியங்களின் நிர்வாகங்களைக் கொண்டது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்களின் சட்டம் இயற்றும் அதிகாரம் பாராளுமன்றம் மற்றும் பிராந்திய சபைகளால் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், நிறைவேற்றதிகாரம் ஜனாதிபதியினால் மாத்திரமன்றி, முதலமைச்சர்கள் மற்றும் பிராந்திய அமைச்சரவைகளின் ஆலோசனையின் பேரில் இயங்கும் ஆளுநர்களாலும் பயன்படுத்தப்படவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. பிராந்தியங்களின் ஆளுநர்கள் பிரதமருடன் கலந்தாலோசித்து அந்தப் பிராந்திய முதலமைச்சரின் உடன்பாட்டுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவேண்டும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பிலும் அதில் தெளிவான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டிருந்தன.
இந்த முன்மொழிவுகளை ஒரு அரசியலமைப்புத் தீர்வாக நடைமுறைப்படுத்துவதற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் காண்பித்த எதிர்ப்பு, நீலன் திருச்செல்வத்தின் கொடூர படுகொலையின் மூலம் வெளிப்பட்டது. இது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முக்கிய தமிழ்க்கட்சியான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்பில் பாரியதொரு அச்சத்தைத் தோற்றுவித்தது. பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் வகையில் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தது. துரதிஷ்டவசமாக ஒரு தேசிய ரீதியிலான முயற்சியை விடவும் கட்சி அரசியல் வெற்றி பெற்றமையினால், பாராளுமன்ற விவாதத்தின்போத அரசாங்கம் அந்த வரைவை வாபஸ் பெறவேண்டிய நிலையேற்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே 2002 இல் நோர்வேயின் மத்தியஸ்தத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான நேரடிப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. இராணுவ ரீதியாகத் தாம் தோற்கடிக்கப்படமுடியாதவர்கள் என்ற அசைக்கமுடியாத சிந்தனை விடுதலைப்புலிகளின் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தியது. எனவே பிரபாகரன் எந்தவொரு குறிப்பிடத்தக்க விட்டுக்கொடுப்பையும் செய்யவேண்டியதன் அவசியத்தை உணரவில்லை. அத்தோடு தமிழீழ அரசு எட்டும் தூரத்திலேயே இருப்பதாக அவர் உறுதியாக நம்பினார். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற ஆறு சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் பிரபாகரனைப் பிரதிநிதித்துவப்படுத்திய அன்ரன் பாலசிங்கம் மாத்திரமே அடிப்படைப்பிரச்சினைகள் குறித்து ஆழமான புரிதலைக் கொண்டவராக இருந்தார். அவருடனான எனது உறவு அதிநெருக்கமானபோது, நான் அவரிடம் 'இன்னமும் மிச்சமிருக்கும் ஒரு குறுகியகால வாய்ப்பை ஏன் விடுதலைப்புலிகள் பயன்படுத்த மறுக்கிறார்கள்' என்ற ஒரு வெளிப்படையான கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. யதார்த்த நிலையைத் தனது தலைவருக்கு விளக்குவதற்குத் தான் இயன்றவரை முயற்சி செய்ததாகவும், ஆனால் தனது தலைவர் அவரது நம்பிக்கைகளில் பிடிவாதமாக இருந்ததுடன், காரண காரியங்களை ஏற்க மறுத்ததாகவும் கூறினார். ஒருகட்டத்தில் அவரைத் தொடர்ந்து வற்புறுத்துவது தனது உயிருக்கே ஆபத்தாக முடியும் என நம்பியதாக அன்ரன் பாலசிங்கம் தெரிவித்தார். லண்டனில் அவர் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருடன் உரையாடிய எரிக் சொல்ஹெய்ம், அன்ரன் பாலசிங்கம் மிகுந்த மனச்சோர்வுடனும் ஏமாற்றத்துடனுமே உயிரிழந்ததாக என்னிடம் கூறினார்.
இவ்வாறான ஏமாற்றமளிக்கும் போக்குகளுக்கு மத்தியிலும், விடயங்களை நம்பிக்கையுடன் அணுகுவது யதார்த்தபூர்வமானதே என்று நான் துணிச்சலாகக் கூறுவேன். கடந்த 27 ஆண்டுகளாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக, சட்டபீட பீடாதிபதியாக மற்றும் துணைவேந்தராக நான் பெற்ற அனுபவங்களே அந்த நம்பிக்கைக்கான அடிப்படையாகும். எமது நாட்டு இளைஞர்கள் குறுகிய இனவாதப் போக்குகளுக்கோ அல்லது தவறான எண்ணங்களுக்கோ இரையாகாதவர்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும் என்றார்.





