சஹ்ரான் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்கிப் பராமரித்தது சுரேஷ் சலேவே; சரத் பொன்சேகா
சுரேஷ் சலே மற்றும் கபில இந்தரவிதான ஆகியோரை நான் அப்பதவிகளில் இருந்து நீக்கியிருந்தேன்.
பொன்சேகாஇராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானியாகக் கடமையாற்றிய சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிக நெருங்கிய அடியாளாகவும், அவரது அனைத்து அநீதியான செயற்பாடுகளையும் நிறைவேற்றும் ஒரு கருவியாகவும் மட்டுமே செயற்பட்டார் சுரேஷ் சலேயின் ஒவ்வொரு அசைவும் கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடி அனுமதியுடனேயே இடம்பெற்றது. எனவே சலே மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் கோட்டாபய ராஜபக்ஷவே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டால் ராஜபக்ஷ குடும்பத்தினர் வரை இது நீண்டுகொண்டே போகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா திட்டவட்டமாக தெரிவித்தார்.
கொழும்பில் 08-06-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய காலத்தில், அவர் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ஆனால், அவரது அந்தப் பணிகள் எந்த வகையிலும் திருப்திகரமாக இருக்கவில்லை. அக்காலப்பகுதியில், புலனாய்வுப் பிரிவினரின் அந்தத் தோல்வியின் விளைவாகவே, இராணுவ தலைமையகத்துக்குள்ளேயே பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல்களை நடத்திவிட்டுச் செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. எனது பதவிக்காலத்தில், இத்தகைய முக்கியமான புலனாய்வு நடவடிக்கைகளை மிகவும் பொறுப்புடன் மேற்கொள்ள, நான் காலாட் படையைச் சேர்ந்த ஒரு ஜெனரலையும், பீரங்கிப் படையைச் சேர்ந்த ஒரு ஜெனரலையும் பிரத்தியேகமாக நியமித்திருந்தேன்.
சுரேஷ் சலே மற்றும் கபில இந்தரவிதான ஆகியோரை நான் அப்பதவிகளில் இருந்து நீக்கியிருந்தேன். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இருவரையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்வாங்கிக்கொண்டு, தம்முடனேயே பாதுகாத்து வந்தார். இவர்கள்தான் பிற்காலத்தில் ராஜபக்ஷக்களின் அரசியல் தேவைக்காகவும், குறிப்பாக 2010 ஜனாதிபதித் தேர்தலின் போது வவுனியாவில் தமிழ் மக்களை அச்சமூட்டும் வகையில் குண்டுகளை வெடிக்கச் செய்து, அரசியல் ஆதாயம் தேடவும் செயற்பட்டார்கள். இந்தச் சம்பவங்கள் குறித்து சுரேஷ் சலேவுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதியின்றி சுரேஷ் சலே கழிப்பறைக்குக் கூடச் செல்லாத அளவுக்கு, ஒரு அடிமையைப் போல அவருக்காகவே அவர் முழுமையாகச் செயற்பட்டார்.
என்னை கைது செய்து, எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் இன்றி இராணுவ தலைமையகத்தில் 8 மாதங்கள் தொடர்ச்சியாகத் தடுத்து வைத்திருந்த காலப்பகுதியில், என்னையும் எனது குடும்பத்தினரையும் பழிவாங்குவதற்கு சுரேஷ் சலே, கபில இந்தரவிதான, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து செயற்பட்டனர். என்னைக் கைது செய்த அன்றைய தினம் அதிகாலை 4 மணி வரை எனது மனைவியை சிஐடியினர் தடுத்து வைத்து விசாரணை செய்தனர். எனது மகள்கள் விமான நிலையத்தின் ஊடாகப் பயணம் செய்ய முற்பட்டபோதும், அவர்களைத் தடுத்து நிறுத்தி 3 முதல் 4 மணித்தியாலங்கள் விசாரணை செய்தனர். பெண் பிள்ளைகள் என்று கூடப் பாராமல் இவ்வளவு கொடூரமாகச் செயற்பட்டதற்குப் பின்னாலெல்லாம் சுரேஷ் சலேயின் ஆலோசனைகளே இருந்தன.





