மாத்தளை மனிதப்புதைகுழி விசாரணைகளை மீள ஆரம்பியுங்கள் - காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மனு
காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ, 'மாத்தளை மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறுகோரி மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறோம்' என்று சுட்டிக்காட்டினார்.
மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறுகோரி காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் 23-06-2026 அன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1980 களின் பிற்பகுதியில் தெற்கில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) எழுச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவுக்கு அங்கம் வகிக்கும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் உறுப்பினர்களால் சட்டத்தரணிகளான ஹிமாலி குலரத்ன மற்றும் லக்மால் சூரியகொட ஆகியோர் ஊடாக நேற்றைய தினம் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுத்தாக்கலின் பின்னர் நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துரைத்த காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ, 'மாத்தளை மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறுகோரி மனுவொன்றைத் தாக்கல் செய்திருக்கிறோம்' என்று சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று 'இதன்போது இம்மனுவை தாக்கல் செய்த சட்டத்ததரணி ஹிமாலி குலரத்ன பல்வேறு விடயங்களை உள்வாங்கியிருந்தார். குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோனை முடிவுகளை நாம் நம்ப மறுப்பதற்கான காரணம், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் எதிர்பார்ப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதை ஆராயவேண்டியதன் அவசியம் என்பன உள்ளிட்ட விடயங்கள் பற்றி அவர் விளக்கமளித்தார்' என்றும் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதேவேளை தற்போது அரச மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் உள்ள 155 மனித எச்சங்கள் யாருடையவை என்பதைக் கண்டறியவதற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய விதத்தில் மரபணு மாதிரி பட்டியலொன்றைத் தயாரிக்குமாறு தாம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.





