காதார அமைச்சருக்கு 10 நாட்கள் காலக்கெடு: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு, வைத்தியர்கள் உள்ளிட்ட மனிதவள பற்றாக்குறை மற்றும் கொடுப்பனவு, சம்பளப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன.
நாட்டின் சுகாதார கட்டமைப்பில் உருவாகியுள்ள நெருக்கடி மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சுகாதார அமைச்சருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவது தொடர்பில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசேக்கர தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றிவரும் வைத்தியர்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் சுகாதார கட்டமைப்பு எதிர்நோக்கியுள்ள பாரிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சருக்கும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க எமது சங்கம் தீர்மானித்துள்ளது. விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய வைத்தியர்களுக்கான விசேட சேவைப் பிரிவு மற்றும் புதிய சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஓராண்டிற்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு, வைத்தியர்கள் உள்ளிட்ட மனிதவள பற்றாக்குறை மற்றும் கொடுப்பனவு, சம்பளப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் இலவச சுகாதார சேவை வீழ்ச்சியடையக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது. நீண்டகால போராட்டத்தின் பின்னர், சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட எழுத்துப்பூர்வ உடன்படிக்கையும் அரசாங்கத்தினரால் மீறப்பட்டுள்ளது. ஆகையால் தற்போது உருவாகியுள்ள சிக்கல்களுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்கள் ஒன்றிணைந்து தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக உள்ளோம்" என்றார்.





