ஒரு பில்லியன் டொலர்களை நட்ட ஈடாக செலுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ பற்றி எரிந்த சம்பவம், உலகில் நடந்த பாரிய கடல் மாசு குறித்த சம்பவமாக கருதப்படுவதாக சுட்டிக்காட்டும் உயர் நீதிமன்றம், அதன் பாதிப்புக்கள் மிக ஆழமானது என குறிப்பிட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பல், தீ பரவலுக்கு உள்ளான விவகாரத்தில் சம்பவத்தை தடுக்கத் தவறியமை மற்றும் தமது பொறுப்புக்களை மறந்து செயர்பட்டமை ஊடாக அப்போதைய விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அப்போதைய தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர, சட்ட மா அதிபர் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் நேற்றுதீர்ப்பளித்தது.
அத்துடன் குறித்த கப்பல் தீ பரவியமை ஊடாக ஏற்பட்ட சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புக்களுக்காக, குறித்த கப்பல் கம்பனி ஒரு பில்லியன் அமரிக்க டொலர்களை நட்ட ஈடாக செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.
அந்த நட்ட ஈட்டுத் தொகை திறை சேரி செயலாளருக்கு கொடுக்கப்படல் வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது. அத்துடன் இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவருக்கு எதிராகவும் சி.ஐ.டி. ஊடாக குற்றவியல் விசாரணை செய்து வழக்குத் தொடுக்குமாறும் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு கட்டளையிட்டது.
இதனைவிட இந்த சம்பவத்தில் உள்ள சில விடயங்களை மையப்படுத்தி விசாரணை ஒன்றினை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல், தீ பரவலுக்கு உள்ளான விவகாரத்தில் பொறுப்புக் கூற வேண்டிய அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் இழப்பீட்டை பெற்றுத் தருமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில் அதன் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.
பிரதம நீதியரசர் முர்து பெர்ணான்டோ, நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு 361 பக்கங்களைக் கொண்ட இந்த தீர்ப்பை ஏகமனதான தீர்ப்பாக அறிவித்தது.
இந்த விவகாரத்தில், SC/FR Application No: 168/ 2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு சுற்றுச் சூழல் நீதிக்கான மையம், அதன் பணிப்பாளர் ரஞித் சிசிர குமார, நீர் கொழும்பை சேர்ந்த மீனவர்களான அப்புஹாமிகே ஹிர்மன் குமார மற்றும் அருன ரொஷனத பெர்ணான்டோ ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு குறித்து சட்டத்தரணி கலாநிதி ரவீந்த்ரநாத் தாபரே தலைமையிலான சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
இது குறித்து தககல் செய்யப்பட்ட மற்றொரு மனுவான SC/FR இல:176/ 2021 எனும் வழக்கு, அருட் தந்த்தை பெனடிக் சரத் இத்தமல்கொட, மீனவ்ர்களான நீர்கொழுமை சேந்த காமினி பெர்ணான்டோ, வென்னப்புவ பகுதியை சேர்ந்த கிரிஸ்தோபர் சரத் பெர்ணான்டோ ஆகியோரால் தாக்கல் செய்யப்ப்ட்டது. இம்மனு சார்பில் சட்டத்தரணி ஹிமாலி குலதுங்க ஆஜரானர.
SC/FR இல: 184/2021 எனும் வழக்கு சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா, ஜெஹான் ஜகதீசன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அம்மனு சார்பில் சட்டத்தரணி கிரிஸ்மால் வர்ணசூரிய
SC/FR இல: 277/2021 எனும் இலக்கத்தின் கீழ் இந்த விடயத்தில் மற்றொரு அடிப்படை உரிமை மீறல் மனு கொழும்பு பேராயர் இல்லம் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரை மனுதாரர்களாக பெயரிட்டு தாக்கல்ச் செய்யப்ப்ட்டது. இம்மனு தொடர்பில் சட்டத்தரணி நில்ஷனத சிரிமான்ன தலைமையிலான குழு ஆஜரானது.
முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, முன்னாள் மீன் பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, துறைமுக அதிகார சபை தலைவர், சுற்றாடல் அமைச்சின் செயலர் , எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் நிறுவனமான சிங்கப்பூர் நிறுவனம், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள் நாட்டு பிரதிநிதி சீ கன்சோர்டியம் தனியார் நிறுவனம், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, சட்ட மா அதிபர் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக இம்மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதில் இடையீட்டு மனுதாரர்கள் சிலரும் இருக்கும் நிலையில் அவர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜரானார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் உள்ளிட்ட பிரதிவடஹிகள் சிலருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜரானார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சட்டத்தரணி மனோகர டி சில்வா பிரதிவாதியான சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அப்போதைய தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர சார்பில் ஆஜரானார்.
சட்ட மா அதிபர் உள்ளிட்ட ஏனைய பிரதிவாதிகளுக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனடஹிபதி சட்டத்தரணி நரின் புள்ளே தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன், அரச சட்டவாதிகளான கனிஷ்க ராஜகருனா, ருஷ்மி விக்ரமகமகே உள்ளிட்ட குழாம் ஆஜரானது.
நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இந்த விவகாரத்திற்குப் பொறுப்பான அப்போதைய இராஜாங்க அமைச்சர் நலக கொடஹேவா, அவரது கீழ் இருந்த சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர் தர்ஷனி லஹந்தபுர மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பலால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக தன்னிச்சையான, பகுத்தறிவற்ற நடவடிக்கைகளை எடுத்து, குற்றவியல் சட்டத்தின் கீழ் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத சட்டமா அதிபர் , தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவியல் திணைக்கலம் மூலம் மூன்று மாதங்களுக்குள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு நீதியர்சர்கல் குழாம் இந்த தீர்ப்பூடாக உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனம் நட்ட ஈடாக செலுத்த உத்தரவிடப்பட்ட 1 பில்லியன் டொலரை ஒரு வருடத்திற்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் தவணை செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ பற்றி எரிந்த சம்பவம், உலகில் நடந்த பாரிய கடல் மாசு குறித்த சம்பவமாக கருதப்படுவதாக சுட்டிக்காட்டும் உயர் நீதிமன்றம், அதன் பாதிப்புக்கள் மிக ஆழமானது என குறிப்பிட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இந்தியாவின் ஹசிராவிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று பயணித்துக்கொண்டிருந்த்துள்ளது. அதில் சுமார் 1,500 கொள்கலன்கள் இருந்தன. இவற்றில் 81 நைட்ரிக் அமிலம் (25 மெட்ரிக் தொன்) மற்றும் பிற இரசாயனங்கள் கொண்ட ஆபத்தான பொருட்கள் இருந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டன.
கடந்த 2021 மே 20 அன்று, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டிருந்தபோது, கப்பலில் நைட்ரிக் அமிலக் கசிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மே 25 அன்று தீ விபத்து ஏற்பட்டது. ஜூன் 2 ஆம் திகதி கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் இலங்கைக் கடலில் மூழ்கியது.
இது மிகப்பெரிய சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, இது உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் கடல் மாசுபாடு சம்பவம் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையின் மேற்கு கடற்கரையில் பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் கரை ஒதுங்கியுள்ளன. மேற்கு கடற்கரையின் சில பகுதிகள் இன்னும் பிளாஸ்டிக்கால் சிதறிக்கிடக்கின்றன என தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிளஸ்டிக் துகல்களுக்கு மேலதிகமாக, பேரழிவின் போது நைட்ரிக் அமிலம், காஸ்டிக் சோடா, ஈயம், தாமிரம், மற்றும் எண்ணெய் போன்ற பிற ஆபத்தான இரசாயனங்கள் கடலில் கலந்துள்ளன..
இதன், பேரழிவின் விளைவாக மீன், ஆமைகள் மற்றும் டொல்பின்கள் உட்பட பல கடல்வாழ் உயிரினங்கள் இறந்தன. சுமார் 300 கி.மீ கடற்கரை எரிந்த பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளால் மூடப்பட்டிருந்த்ததாகவும் வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தப் பேரழிவால் கப்பல் மூழ்கிய பகுதியிலிருந்து 80 கி.மீ சுற்றளவில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்ப்ட்டதாகவும் இதன் விளைவாக, சுமார் 12,000 மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும் வழக்கில் குறிப்பிடபப்பட்டுள்ளது,
நேற்று வெளியிடப்பட்ட தீர்ப்பில் தகவல்கள் மறைக்கப்பட்டமை தொடர்பில் பிரத்தியேகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கப்பலின் தலைமை மாலுமி, இயக்குனர் மற்றும் கப்பலின் உள்ளூர் முகவர் ஆகியோர் கொழும்பு துறைமுக ஹாபர் மாஸ்டருக்கு கப்பலின் உண்மையான நிலையை மறைத்ததாக தீர்ப்பில் குறிப்பிட்டது. கப்பலின் உள்ளூர் முகவராகச் செயல்படும் நிறுவனம், உரிமையாளர், கப்பல் குழுவினர் மற்றும் நிறுவனம் சம்பவத்தை மறைத்ததாகவும், இது சேதத்தை மேலும் மோசமாக்கியதாகவும் அதனால் அந்த சம்பவத்திற்கு அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பு கூரவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மனைத்துள்ளது.
சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கைக்குத் தேவையானபடி அறிவிக்கத் தவறியதன் மூலம் கப்பலின் தலைமை மாலுமி, இயக்குனர்கள் மற்றும் உள்ளூர் முகவர் சர்வதேச சட்டத்தை மீறியதாகவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சீ கன்சார்டியம் லங்கா பிரைவேட் லிமிடெட் கப்பலின் உள்ளூர் முகவராக செயர்பட்டுள்ள நிலையில் அந்த நிறுவனம் தகவல்களை மறைத்து மோசடி செய்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் நிறுவனத்தின் அனைத்து பணிப்பாளர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொடர்பு விவரங்களை உடனடியாக வெளியிட உத்தரவிட்டது.
கடல்சார் சுற்றுச்சூழல் கவுன்சிலை நிறுவத் தவறியதற்காகவும், சமுத்திர சூழல் மாசு தடுப்புச் சட்டத்தின் பிரிவு 14 இன் கீழ் தனது சட்டப்பூர்வ கடமையை நிறைவேற்றத் தவறியதற்காகவும் அப்போதைய சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பொறுப்புக் கூற வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சமுத்திர சூழல் மாசு தடுப்புச் சட்டத்தின் பிரிவு 52(3) இன் கீழ் அவருக்கு ஒதுக்கப்பட்ட மேற்பார்வைக் கடமைகளை அவர் நிறைவேற்றத் தவறியதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றிய தர்ஷனி லஹந்தபுரவும் இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கத் தவறிவிட்டார் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அவர் தனது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் மிக முக்கியமான பகுதி, சட்டமா அதிபர் பொறுப்பு கூர வேண்டும் என கண்டறியப்ப்ட்டுள்ள விஒடயமாகும். சமுத்திர சூழல் மாசு தடுப்புச் சட்டத்தின் பிரிவு 26(a) இன் கீழ் எக்பிரஸ் பேர் ளின் உரிமையாளர் மற்றும் பணிப்பாலர்கள் மீது குற்றவியல் பொறுப்புக்காக வழக்குத் தொடரத் தவறியதற்கு சட்டமா அதிபர் பொறுப்புக் கூற வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்குப் பதிலாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கினை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் எடுத்த முடிவு நியாயமற்றது எனவும் பகுத்தறிவற்ற மற்றும் தன்னிச்சையானது என்றும் இந்தத் தீர்ப்பு கூறுகிறது. அந்த நடவடிக்கை இலங்கையின் நலன்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம், எக்பிரஸ் பேர் ளின் இழப்பீட்டு ஆணைக் குழு ஸ்தபைக்கப்ப்ட உத்தர்விடப்பட்டுள்ளது.. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியர்சர் ஈ.எ.ஜி.ஆர்.அமரசேகர அதன் தலைவராக நியமிக்கப்பட உத்தர்விடப்ப்ட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகை குறித்து நடவடிக்கை எடுப்பதே அவ்வாணைக் குழுவின் பணி என தீர்ப்பு கூறுகின்றது.
இதனைவிட , இந்தத் தீர்ப்பானது 'எக்ஸ்பிரஸ் பேர்ல் கடல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்புக் குழுவை' நிறுவியுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர் (அதிகாரப்பூர்வ அதிகாரத்தால்) அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் குற்றப் புலனாய்வுத் தினைக்களம் மேலும் விசாரணைகளை நடத்தி மூன்று மாதங்களுக்குள் விசாரணைகளை முடிக்க தீர்ப்பில் கட்டளை இடப்பட்டுள்ளது.
எனவே, சட்டமா அதிபர் உடனடியாக ஏற்கனவே உள்ள ஆதாரங்களை மறுபரிசீலனை செய்து அனைத்து குற்றவாளிகள் மீதும் குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரலின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முரை உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கவும் சட்டமா அதிபர் இந்த தீர்ப்பு ஊடாக பணிக்கப்ப்ட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகளும் இருந்தன. இது தொடர்பாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு பணிப்பாளர் நாயகத்துக்கும் உடனடி விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பணித்துள்ளது.
இந்த மனுவின் அனைத்து நடவடிக்கைகளும் இன்னும் முடிவடையவில்லை என்றும், வழக்கு மீண்டும் செப்டம்பர் 25 அன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்படும் செலவுகளை சட்டமா அதிபரிடமிருந்து கோரலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு 361 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தீர்ப்பை பிரதம நீதியர்சர் முர்து பெர்னாண்டோ எழுதியுள்ளார். உயர் நீதிமன்ற நீதியர்சர்களான யசந்த கோதாகொடா, ஷிரான் குணரத்ன, அச்சலா வெங்கப்புலி மற்றும் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியர்சரசர்கள் தீர்ப்பு தொடர்பில் கூட்டாக கையொப்பமிட்டுள்ளனர்.