கடற்பரப்பில் சட்டவிரோத வேட்டையாடுதல் தொடர்பான சட்டத்தைச் சிறிலங்கா பலப்படுத்தவுள்ளது
குறித்த ஆரம்ப வரைபை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்ட மூலமொன்றை தயாரிப்பதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வள அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தை இரத்துச் செய்யும் அதேவேளை, சிறிலங்காக் கடற்பரப்பில் சட்டவிரோத மற்றும் முறைப்படுத்தப்படாத வேட்டை நடவடிக்கைகள் தொடர்பான சட்டமூலங்களை பலப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் வரைவதற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது.
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டம் இதுவரை 8 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதோடு, அச்சட்டத்தை நீக்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பல சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அது தொடர்பான பணிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை.
நாட்டின் பிராந்திய கடல் மற்றும் ஆழ்கடலில் சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள், அத்துடன் சட்ட வரைவு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினால் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் பூர்வாங்க வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த ஆரம்ப வரைபை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்ட மூலமொன்றை தயாரிப்பதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வள அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.