வட, கிழக்கு அபிவிருத்துக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி
முதலாவது மற்றும் இரண்டாவது ஜப்பான் - இலங்கை உத்தியோகபூர்வ கொள்கை கலந்துரையாடல்கள் முறையே 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.
வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் தேசிய நல்லிணக்கம் என்பன உள்ளடங்கலாக இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக ஜப்பான் உறுதியளித்துள்ளது.
நாட்டுக்கு வருகைதந்திருந்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்காசிய விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் உதவி அமைச்சருமான ஷின்கோ மியமோட்டோ மற்றும் இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சின் பரஸ்பர அரசியல் விவகாரங்களுக்கான (கிழக்கு) மேலதிக செயலாளர் சஷிகலா பிரேமவர்தன ஆகியோருக்கு இடையிலான 3 ஆவது ஜப்பான் - இலங்கை உத்தியோகபூர்வ கொள்கை கலந்துரையாடல் 30-07-2025 அன்று கொழும்பில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இஸோமாட்டா மற்றும் வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட ஏனைய சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
முதலாவது மற்றும் இரண்டாவது ஜப்பான் - இலங்கை உத்தியோகபூர்வ கொள்கை கலந்துரையாடல்கள் முறையே 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.
அதன் நீட்சியாக இம்முறை நடைபெற்ற மூன்றாவது கலந்துரையாடலின்போது இருதரப்பினரும் தத்தமது நாடுகளின் வெளிநாட்டுக்கொள்கை மற்றும் அதன்கீழ் முன்னுரிமை அளிக்கப்படும் விடயங்கள், பரஸ்பர நல்லுறவு, சமகால சர்வதேச நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இதன்போது நாடு முகங்கொடுக்கநேர்ந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து கடன்மறுசீரமைப்பு செயன்முறை உள்ளடங்கலாக பல்வேறு வழிகளிலும் ஜப்பான் வழங்கிய முழுமையான ஒத்துழைப்புக்கு இலங்கை சார்பில் சஷிகலா நன்றி தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த ஷின்கோ மியமோட்டோ ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான செயற்திறன்மிக்க நல்லுறவின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு தொடரும் எனவும், நேர்மறையான வளர்ச்சியை அடைவதற்கு ஆதரவளிப்பதே தமது நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.





