இலங்கை வரும் இந்திய இராணுவ தளபதி
இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) போர் நினைவுச் சின்னத்திற்குச் சென்று, உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அவர் வீரவணக்கம் செலுத்தவுள்ளார்.
நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய இராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு 07-01-2026 அன்று புதன்கிழமை நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தைத் தொடர்ந்து, அவர் இலங்கைக்கான இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை இராணுவத்தின் கௌரவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கவுள்ள அவர், இராணுவ தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய இராணுவ மற்றும் உயர்மட்ட சிவில் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்புகளில் பயிற்சி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு போன்ற இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் (DSCSC) உரையாற்றவுள்ள அவர், புத்தளத்திலுள்ள இராணுவப் போர் கல்லூரியில் (Army War College) பயிற்சி பெறுபவர்களுடனும் கலந்துரையாடவுள்ளார். மேலும், இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) போர் நினைவுச் சின்னத்திற்குச் சென்று, உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அவர் வீரவணக்கம் செலுத்தவுள்ளார்.
இந்திய இராணுவ தளபதியில் இந்த விஜயமானது மேற்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் பரஸ்பர நம்பிக்கை, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டுச் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.





