அரச - தனியார் கூட்டு முயற்சி அவசியம்; ஆளுநர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி அநுர
பொருளாதாரம் மீண்டெழுந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவால் மீண்டும் பழைய நிலைமைக்கு செல்வதற்கு இடமளிக்க முடியாது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவின் பின்னர் அனைவரையும் மீளக் கட்டியெழும்பி இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்வது இலகுவானதல்ல. அதனை அரச பொறிமுறையின் ஊடாக மாத்திரம் செய்ய முடியாது. எனவே அரச - தனியார் கூட்டு முயற்சியில் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தற்போதைய அனர்த்த நிலைமை குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் செயலாளர்களுடன் இணையவழி ஊடாக நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும். அவற்றின் முறையாக வழங்குவதே தற்போது பாரிய சவாலாக உள்ளது. அதனையடுத்து நாம் எதிர்கொள்ளவுள்ள பாரிய சவால் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மீள்கட்டியெழுப்புவதாகும்.
குறிப்பாக சேதமடைந்துள்ள பிரதான வீதிகள், பாலங்கள், கிராமிய வீதிகள் என்பவை துரிதமாக மீள் நிர்மாணிக்கப்பட வேண்டும். மாகாண சபை, பிரதேச சபை மட்டத்தில் அதற்கான தகவல்கள் கோருகின்றோம். மேலும் செயலிழந்துள்ள தொலை தொடர்புகள், மின்விநியோகம், நீர் விநியோகம் உள்ளிட்டவற்றையும் வெகுவிரைவில் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த பேரழிவின் பின்னர் அனைவரையும் மீளக் கட்டியெழும்பி இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்வது இலகுவானதல்ல. எனவே அதற்கான வேலைத்திட்டங்களை மிகுந்த பலத்துடன் முன்னெடுக்க வேண்டும். அதற்காகவே அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரசு தனியார் கூட்டு முயற்சியில் 'இலங்கையை உருவாக்குவோம்' என்ற நிதியம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
காரணம் நாம் இந்த அழிவிலிருந்து மீள்வதற்கு எமக்கு பாரிய நிதி உதவிகள் தேவைப்படுகின்றன. பொருளாதாரம் மீண்டெழுந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவால் மீண்டும் பழைய நிலைமைக்கு செல்வதற்கு இடமளிக்க முடியாது.
எனவே நிதி உதவிகளை பெறுவது அத்தியாவசியமானதாகும். அதற்கான புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுவது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்த வேண்டி உள்ளது.
அது மாத்திரமின்றி சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இவ்வாறு படிப்படியாக பொருளாதார மீள் எழுச்சிக்கான வேலை திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும். பேரலவங்களால் தமது குடியிருப்புகள் உடைமைகள் அனைத்தையும் இழந்த மக்களை தொடர்ந்தும் பராமரிக்கவும், அவர்களது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும்.
மாவட்ட ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கையும் அதற்கான செலவு அறிக்கையை விரைவில் என்னிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட அதிபர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். ஜனவரி மாதத்தின் பின்னரே வரவு செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். எனவே அதற்கு முன்னர் இவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொள்ள முடியும். எந்த காரணத்துக்காகவும் இந்த திட்டங்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது.
அரச நிறுவனங்களால் மாத்திரம் தனித்து இதனை எதிர்கொள்ள முடியாது. எனவே அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், வர்த்தக சமூகம் உள்ளிட்ட பலரிடமிருந்து இதற்கான ஒத்துழைப்புகளை கோர எதிர்பார்த்துள்ளோம். தற்போது மாகாண சபைகள் செயலிழந்து உள்ளதால் மாகாண ஆளுநர்கள் மற்றும் செயலாளர்களே எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.





