தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுர உடன் நடவடிக்கை
கல்வி துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள், மாகாண மற்றும் வலய மட்டத்திலான தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களின் நியமனங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய வம்சாவளி மலையக மற்றும் தென்னிலங்கை வாழ் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக, ஜனாதிபதி செயலகத்தில் உயர் மட்ட இணைப்பதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தின் தலைமை அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தியை மலையக விவகாரங்களுக்கான இணைப்பாளராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்துள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழுவிற்கும் இடையில் 02-04-2026 அன்று நடைபெற்ற விசேட சந்திப்பைத் தொடர்ந்தே இந்த முக்கிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர்களான பரணிதரன், பாரத் அருள்சாமி, நகுலேஸ்வரன், விஜயசந்திரன், சசில்குமார், விஸ்வநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் குறிப்பிடுகையில், மலையக மற்றும் தென்னிலங்கை வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு நிர்வாக மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதி செயலக மட்டத்தில் கையாள்வதற்கு ஒரு பொறிமுறை அவசியமென நாம் வலியுறுத்தினோம். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தனது காரியாலயத்தின் பிரதம அதிகாரியையே இதற்காக நியமித்துள்ளார். இனிவரும் காலங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எமது கூட்டணி இந்த இணைப்பாளருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி உடன்பாடுகளை எட்டும். அந்த உடன்பாடுகளைத் துறைசார் அமைச்சர்கள் ஊடாக நிறைவேற்றித் தருவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இன்றைய இச்சந்திப்பின்போது மலையக மக்கள் சார்ந்த பல முக்கிய விவகாரங்கள் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, தித்வா மலையகப் பேரழிவு, காணி உரிமை மற்றும் மலையகத்தில் தொடர்மாடி குடியிருப்புத் திட்டங்கள் நிராகரிக்கப்படுதல் போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன், 50 இலட்ச வீட்டுரிமைத் திட்டம், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அரச பொது நிர்வாகத்தில் தமிழ் அதிகாரிகளின் உள்வாங்கல், தமிழ் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளை அதிகரித்தல், மேலதிக தமிழ் பிரதேச செயலாளர்களை நியமித்தல் போன்ற நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது. கல்வி துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள், மாகாண மற்றும் வலய மட்டத்திலான தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களின் நியமனங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மகாண-வலய தமிழ் கல்வி பணிப்பாளர் மற்றும் தமிழ் அதிபர்கள் நியமனம், கொழும்பு ரோயல் கல்லூரி, டீ.எஸ். சேனநாயக்க கல்லூரி மற்றும் இசிபத்தன கல்லூரி போன்ற பிரபல்யமான பாடசாலைகளில் தமிழ் மொழி மூலமான வகுப்புகள் மற்றும் மாணவர் அனுமதிகள் குறைக்கப்படுவது குறித்தும் ஜனாதிபதியிடம் விபரிக்கப்பட்டது. பொலிஸ் துறையில் தமிழ் இளைஞர், யுவதிகளை உள்வாங்குதல் மற்றும் நீண்டகாலமாகத் தாமதமடைந்துவரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் அவசியம் குறித்தும் இதன்போது விரிவாகப் பேசப்பட்டது என்றார்.





