இந்திய மானிய உதவியுடன் பொலன்னறுவையில் பல்லின மும்மொழி பாடசாலை திறப்பு
உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில், இரு நாடுகளின் மக்களின் நலன் குறித்த பொதுவான உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
இந்திய மானிய உதவியுடன் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட பல்லின மும்மொழி பாடசாலை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இப் பாடசாலையை பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரிய, இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இணைந்து திறந்து வைத்தனர். பல இன சூழலில் தரமான கல்வியை வழங்குவதற்காக 2017-இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு இந்தியா 320 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி உதவியை வழங்கியுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததுடன், கல்வித் துறையில் உள்ள உட்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவைப் பாராட்டினார்.
உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாற்றுகையில், இரு நாடுகளின் மக்களின் நலன் குறித்த பொதுவான உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். மேலும், இந்தியாவின் தேசிய கல்வி கொள்கை 2020 மற்றும் இலங்கையில் 2026-இல் வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த மாற்றத்திற்கான பயணத்தில் இலங்கையுடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது என்று உறுதியளித்தார்.
கடந்த காலத்தில், ரூ ஹு ணு பல்கலைக்கழகத்தின் தாகூர் கலையரங்கம் உட்பட பல உட்கட்டமைப்புப் பணிகள், 2000 தோட்டத்துறை ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் 200-க்கும் மேற்பட்ட புலமைப்பரிசில்கள் மூலம் இந்திய அரசின் அபிவிருத்தி உதவிகள் இலங்கையின் கல்வித் துறைக்கு தொடர்ந்து கிடைத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





