தையிட்டியில் நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் மக்கள் போராட்டம்
போராட்டக்காரர்களின் எண்ணிக்கையானது வழக்கத்துக்கு மாறாக அதிகமாக காணப்பட்ட நிலையில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டதோடு வீதித்தடைகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றி தமது பூர்வீக நிலங்களை கையளிக்குமாறு கோரி 03-01-2026 அன்று பௌர்ணமி தினத்தில் நூற்றுக்கணக்கானோரின் பங்கேற்புடன் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ள நிலங்களின் உரிமையாளர்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் சிவில் தரப்பினர் உட்பட பலநூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
திஸ்ஸ விகாரையில் பௌர்ணமி தினமான நேற்று புத்தர் சிலையொன்றை நிறுவி விசேட ஆராதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த செயற்பாடு சம்பந்தமாக தகவல்கள் கசிந்திருந்த நிலையில் பெருமளவானவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புக்களை வெளியிடுவதற்கு பல்வேறு தரப்பினராலும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி தேரரின் தலையீடுகளை அடுத்து திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி, குறித்த புத்தர்சிலை நிர்மாணித்து இடம்பெறவிருந்த ஆராதனைகள் முன்னெடுக்கப்படாது என்று கடந்த 30ஆம் திகதி அறிவித்திருந்தார்.
புத்தர் சிலை மீட்பு
எனினும், பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழுவொன்று, காங்கேசன்துறையில் உள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் புத்தர் சிலையொன்றுடன் காத்திருக்கின்றனர் என்ற இரகசிய தகவல் நேற்றையதினம் காலையில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்திருந்தது.
அதனடிப்படையில் அங்கு விரைந்திருந்த பொலிஸார் சிற்றுண்டி பொலிஸார் புத்தர் சிலையை மீட்டதுடன், புத்தர் சிலையை அங்கு பிரசன்னமாகியிருந்த பௌத்த தேரர் தலைமையிலான குழுவினரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனடிப்படையில், தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலையே அவ்வாறு மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி கோசம்
குறித்த புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்ட தகவல் வெளிப்பட்டிருந்த நிலையில் நண்பகலுக்குப் பின்னர் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஒன்றுகூட ஆரம்பித்தனர்.
இதில் தவத்திரு வேலன் சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நிலமீட்புக்காக குரல்கொடுத்துவரும் காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இணைந்து கொண்டனர்.
அவ்வாறு ஒன்று கூடியவர்கள், எங்களது சொந்த நிலத்தில் வாழவிடு, தனியார் காணிகளில் சட்டவிரோத விகாரையா, நிலங்களைப் பறிப்பது தான் பௌத்தமா, எமது நிலம் எமக்கு வேண்டும், இந்த மண் எங்களின் சொந்த மண், பொலிஸாரின் அராஜாகம் ஒழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணி உரிமையாளர்களின் உறுதியான நிலைப்பாடு
குறிப்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்கள் சட்டவிரேதமாக நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்றி தங்களுடைய பூர்வீக நிலங்களை மீளக் கையளியுங்கள் என்று வலியுறுத்தியதோடு நான்கு கட்டங்களாக காணிகளை மீளக் கையளிக்கும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கோரினார்கள்.
தங்களுடைய காணிகளை மீட்பதற்கு நான்கு தலைமுறையாக போராடி வருகின்ற நிலையில், நான்கு கட்டங்களாக காணிகளை விடுப்பதாக இருந்தால் தங்களது அடுத்த சந்ததியும் போராட்டத்தில் தான் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நேரடியாக விஜயத்தின் போது திஸ்ஸ விகாரைக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை அடையாளம் காண்பித்துள்ள நிலையில் திஸ்ஸ விகாரைக் காணிகளை மீளக் கையளித்து ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்துக்குச் செல்வது தான் பொருத்தமானது என்று குறிப்பிட்டனர்.
நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிப்பு
போராட்டக்காரர்களின் எண்ணிக்கையானது வழக்கத்துக்கு மாறாக அதிகமாக காணப்பட்ட நிலையில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டதோடு வீதித்தடைகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.
அத்தோடு கலகமடக்கும் பொலிஸாரும், நீர்;த்தாரை பிரயோகிக்கும் வாகனமும் வருவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் வருகை தந்த அனைவரையும் ட்ரோன் கமராக்கள் கொண்டு கண்கானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்களமயமாகும் பேராபத்து நிலை
இதேவேளை, தவத்திரு வேலன் சுவாமிகள், திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தங்குமிடங்கள், தேரர்கள் தங்குவதற்கான மடங்கள் உள்ளிட்டவற்றை நிர்மாணித்து விகாரையைச்சுற்றி சிங்கள பௌத்த குடியேற்றங்களைச் செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாகி வருவதாக எச்சரிக்கை விடுத்ததோடு இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மக்களின் சொந்தக்காணிகளை ஆக்கிரமித்து விகாரைகளை அமைக்கும் ஆக்கிரமிப்புக்கள் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்றது. இதற்கு அனுமதிக்க முடியாது. சமத்துவமும், சமாதனமும் பேசும் அநுர அரசாங்கம் இந்த செயற்பாடுகளை அனுமதித்தால் ஒருபோதும் சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படாது என்று குறிப்பிட்டதோடு, இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆகியவை திட்டமிட்டு தரைமட்டமாக்கப்பட்ட அவலங்கள் உள்ள நாட்டில் சட்டவிரோத விகாரையை அகற்றவதில் பிரச்சினை என்ன இருக்கின்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள், அதுவரையில் நில மீட்பாளர்களுக்காக தங்களுடைய முழுமையான ஒத்துழைப்புக்களும் தொடரும் என்றும் நீதிக்கான போராட்டத்தில் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் அறிவித்தனர்.





