உரோம் பிரகடனத்துக்கு இணங்குங்கள்; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையில் பரிந்துரை
முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்துக்கு இணங்குவதன் ஊடாக நிலைமாறுகால நீதிக்கு ஏதுவான சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் அவசியமான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கும், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருக்கிறது. பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதும், மோதலுக்கான அடிப்படைக்காரணங்களைக் களைவதும் அரசாங்கத்தின் இலக்கான தேசிய ஒருமைப்பாட்டை அடைந்துகொள்வதற்கு மிக அவசியமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அவசியமான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கும், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருக்கிறது. பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதும், மோதலுக்கான அடிப்படைக்காரணங்களைக் களைவதும் அரசாங்கத்தின் இலக்கான தேசிய ஒருமைப்பாட்டை அடைந்துகொள்வதற்கு மிக அவசியமாகும்.
அத்தோடு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையின் ஊடாகக் கடந்த 4 வருடங்களில் சுமார் 34,000 தரவுகள் மற்றும் ஆதாரங்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முற்கூட்டிய வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக புதிய அரசாங்கம் அளித்திருக்கும் வாக்குறுதி குறித்து அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதேவேளை, கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஆக்கபூர்வமானதும், வலுவானதுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையில் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து நவம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிகளவு ஆசனங்களை வென்றதன் ஊடாக ஆக்கபூர்வமான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு மக்கள் ஆணை வழங்கினர். அத்தோடு பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டமையானது 1994 ஆம் ஆண்டின் பின்னர் பெண்ணொருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக அமைந்தது. அதுமாத்திரமன்றி இத்தேர்தலில் 22 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குத் தெரிவானதன் ஊடாக பெண் பிரதிநிதித்துவம் 9.8 சதவீதத்தினால் அதிகரித்தது. அதனைத்தொடர்ந்து அரசியல், சட்ட மற்றும் பொருளாதார ரீதியான சவால்களின் விளைவாக ஏற்பட்ட காலதாமதத்தின் பின்னர் இவ்வருடம் மேமாதம் நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 43.2 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன் வட, கிழக்கு மாகாணங்களின் ஆதிக்கத்தை தமிழ்க்கட்சிகள் மீளக்கைப்பற்றின. இருப்பினும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்கள் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படவில்லை.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் கொள்கைப்பிரகடன உரையாற்றிய ஜனாதிபதி பல தசாப்தகால இனவாத அரசியல் மற்றும் இனமோதல்களின் விளைவாக மிகமோசமான பாதிப்புக்களும், துன்பங்களும் நேர்ந்தன என்பதை ஏற்றுக்கொண்டார். அதேபோன்று நீண்டகாலமாக முன்னெடுக்கப்படவேண்டியிருக்கும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதாகவும் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், ஊழல் மோசடிகளைக் கையாளல், சுயாதீன குற்றவியல் அலுவலகத்தை ஸ்தாபித்தல், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் மற்றும் ஏனைய முக்கிய குற்றச்சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன உள்ளிட்ட நீண்டகால மனித உரிமைகள்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதாகவும் இப்புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. அதுமாத்திரமன்றி சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக்கூடியதும், அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை சகல உள்ளுராட்சி, மாவட்ட மற்றும் மாகாணசபைகளுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடியதுமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பல்வேறு தாக்கங்கள் தொடர்ந்து உணரப்பட்டன. 2024 ஆம் ஆண்டு இலங்கையின் வறுமை மட்டம் 24.5 சதவீதமாகப் பதிவாகியிருந்ததுடன், அது 2019 ஆம் ஆண்டு பதிவான வறுமை மட்டத்தைவிட இருமடங்கு உயர்வானதாகும். 2021 - 2024 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் உணவுப்பொருட்களின் விலைகள் இரு மடங்காக அதிகரித்தன. பெரும்பாகப் பொருளாதார மீட்சிக்கு மத்தியிலும் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் என்பன பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான மட்டத்தை விடக் குறைவான மட்டத்திலேயே காணப்பட்டதுடன் இது வறுமை மற்றும் உணவுப்பாதுகாப்பின்மை என்பன தீவிரமடைவதற்கு வழிகோலியது.
ஏற்கனவே கட்டமைப்பு மற்றும் பொருளாதார ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துவரும் மலையகத் தமிழ்ச்சமூகம், பொருளாதார நெருக்கடியினால் மேலும் பாதிக்கப்பட்டது. பெருந்தோட்ட சமூகமானது காணி மற்றும் தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதில் தொடர்ந்து குறிப்பிடத்தக்களவு சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றது.
அடுத்ததாக பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக சகல ஒடுக்குமுறைச்சட்டங்களையும் இல்லாதொழிப்பதாகப் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அச்சட்டத்தை முற்றாக நீக்குவது குறித்து ஆராய்வதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமென கடந்த பெப்ரவரி மாதம் அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. அத்தோடு புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை அனுப்பிவைப்பதற்கு பொதுமக்களுக்கு வெறுமனே இரண்டு வார காலஅவகாசத்தை வழங்கும் அறிவிப்பு கடந்த மேமாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. அப்புதிய சட்டமூலத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது இவ்வாறிருக்க அரசாங்கமானது நபர்களைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்திவருகிறது. இவ்வறிக்கை தொடர்பான ஆணை வழங்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் நினைவுகூரல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அவற்றை ஒழுங்குசெய்தவர்கள் உள்ளடங்கலாகப் பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த நபர்கள் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் படையினரை ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கும் வகையில் பொதுப்பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் 12 ஆவது பிரிவின்கீழ் வெளியிடப்பட்டுவரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் தற்போதைய அரசாங்கத்தினால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவருகிறது.
அதேபோன்று நிகழ்நிலைப்பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தியமைப்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருப்பினும், அச்சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் இவ்விரு சட்டங்களும் நிகழ்நிலை முறைமையிலும், நேரடியாகவும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை வெகுவாக மட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
மேலும் முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவருகிறது. கடந்த அரசாங்கத்தினால் 2023 ஆம் ஆண்டு மேமாதம் முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டத்திருத்த வரைவு தயாரிக்கப்பட்டது. அதனை அடுத்தகட்ட கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்வதாகத் தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஆக்கபூர்வமானதும் செயற்திறன்மிக்கதுமான பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளன. குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சமூகத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொறுப்புக்கூறல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட சமூகப்பிரச்சினைகள் சார்ந்து இயங்கிவருவோர் மீதான கண்காணிப்புக்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன.
அடுத்ததாக பௌத்த பிக்குகள், தொல்பொருள் திணைக்களம், வனவளத்திணைக்களம் உள்ளிட்ட கட்டமைப்புக்களின் அரச அதிகாரிகள் கூட்டாக இணைந்து வட, கிழக்கு மாகாணங்களில் மதவணக்கஸ்த்தலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் முன்னெடுத்துவரும் காணி சுவீகரிப்புக்கள் தொடர்கின்றன.
யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யுத்தகாலத்தில் சர்வதேச குற்றங்கள் உள்ளடங்கலாக மிகமோசமான மீறல்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்வதும், அதுகுறித்து உரியவாறான தீர்வை வழங்குவதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை மற்றும் நீதியை உறுதிசெய்வதும் அவசியமாகும். மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையையும், நீதியையும் உறுதிசெய்வதற்குத் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அவரது கொள்கைப்பிரகடன உரையில் குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கருத்தானது செயல் வடிவம் பெறுமாயின், அதனூடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்டதொரு வாய்ப்பு கிட்டும். இருப்பினும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இன்னமும் தொடர்வதுடன், கடந்தகால மீறல்களுக்கு வழிகோலிய கட்டமைப்பு ரீதியான நிலைமைகள் மாற்றமின்றிக் காணப்படுகின்றன.
2018 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகமானது வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் எங்கே? என்ற உண்மையைத் தற்போதுவரை வெளிப்படுத்தவில்லை. அதுமாத்திரமன்றி அக்கட்டமைப்பின்மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை மீண்டும் வென்றெடுப்பதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகமானது தெளிவானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், காலம் குறித்துரைக்கப்பட்டதுமான இலக்குகளின் அடிப்படையில் சீராக செயற்படவேண்டியது அவசியமாகும்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உயர்ஸ்தானிகர் செம்மணி மனிதப்புதைகுழி கண்டறியப்பட்ட பகுதியையும் சென்று பார்வையிட்டார். மனிதப்புதைகுழிகள் அகழப்படுவதையும், அவை உரியவாறு பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதுடன் தடயவியல் பகுப்பாய்வுக்கான இயலுமையை மேம்படுத்தவேண்டிய உடனடித்தேவை காணப்படுகிறது.
அடுத்ததாக சகல தரப்பினருடனான கலந்துரையாடல்களின் பின்னர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்தவேண்டுமெனில், நிலைமாறுகால நீதி தொடர்பான வெளிப்படையானதும், நியாயமானதுமான கலந்துரையாடல்கள் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் அரசாங்கம் முதலில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பவேண்டும். அத்தோடு கடந்த பல வருடகாலமாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஏனைய ஐ.நா மனித உரிமைகள் நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக அக்கட்டமைப்பினைக் கட்டியெழுப்பவேண்டும்.
இலங்கையில் கடந்தகாலங்களிலும், சமகாலத்திலும் குறிப்பாக பாதுகாப்புப்படையினருடன் தொடர்புடைய வகையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமையானது நாட்டின் அடிப்படை மனித உரிமைசார் பிரச்சினையாகக் காணப்படுகிறது. அத்தோடு யுத்தகாலப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்னமும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வது குறித்து நாம் தீவிர கரிசனையடைகிறோம்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருக்கு பின்னணியில், அத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் எனக் கண்டறிதல் உள்ளடங்கலாக அதுகுறித்து சுயாதீனமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான பரந்துபட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
மேலும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்குப் பங்களிப்புச்செய்யும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தாம் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக முறைப்பாடளித்துள்ளனர். அத்தோடு இதற்கான பிரதான நிதியளிப்பு தடைப்பட்டதன் காரணமாக ஆதாரங்களைத் திரட்டல் மற்றும் பாதுகாத்தல் என்பவற்றுக்கான இயலுமையில் எதிர்மறைத்தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்pடம் சுமார் 105,000 க்கும் மேற்பட்ட தரவுகள் உள்ளன. அவற்றில் 75,800 தரவுகள் 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது திரட்டப்பட்டவையும், 2000 தரவுகள் ஐ.நாவின் ஏனைய செயற்திட்டங்களின் ஊடாகத் திரட்டப்பட்டவையும், 34,000 தரவுகள் கடந்த 4 வருடங்களில் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக சுதந்திரமாகத் திரட்டப்பட்டவையும் ஆகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அவசியமான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கும், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருக்கிறது. பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதும், மோதலுக்கான அடிப்படைக்காரணங்களைக் களைவதும் அரசாங்கத்தின் இலக்கான தேசிய ஒருமைப்பாட்டை அடைந்துகொள்வதற்கு மிக அவசியமாகும்.
அத்தோடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்துக்கு இணங்குவதன் ஊடாக நிலைமாறுகால நீதிக்கு ஏதுவான சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.





