ஞானசார தேரர் செய்த தவறு என்ன? சஜித் தரப்பு கேள்வி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்ய வந்த புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரிக்கே பொதுமன்னிப்பு வழங்கினார்.
விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்கள்.அவ்வாறான பின்னணியில் ஞானசார தேரருக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது. அவர் செய்த தவறென்ன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்தார்.
பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேருக்கு பொதுமன்னிப்பு வழங்க போவதில்லை என்று அமைச்சர் லால் காந்த குறிப்பிடுகிறார்.ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் எவ்வாறு குறிப்பிட முடியும்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்கள்.அவ்வாறான பின்னணியில் ஞானசார தேரருக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்ய வந்த புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரிக்கே பொதுமன்னிப்பு வழங்கினார்.
ஞானசார தேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி ஜனாதிபதி சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும். பௌத்த பிக்குகள் வீதிக்கு இறங்கி போராடினால் அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்றார்.





