மத அடையாள சின்னங்களுக்கான தடையை உறுதி செய்தது கனடா உச்ச நீதிமன்றம்
இருப்பினும், அந்த விதிவிலக்கு அதிகாரப் பிரிவின் பாதுகாப்பைப் பெற்றுள்ள சட்டங்கள் குறித்தும் நீதிபதிகள் அறிவிப்புகளை வெளியிட முடியும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட சில பொதுத்துறை ஊழியர்கள் பணியின்போது மத அடையாளச் சின்னங்களை அணிவதற்குத் தடை விதிக்கும் கியூபெக் மாகாணச் சட்டத்தை கனடா உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
சில மாகாண அரசியல்வாதிகள் கனடா உச்ச நீதிமன்றத்தின் முடிவை வரவேற்றுள்ள நிலையில், இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கனடா பிரதமர் மார்க் கார்னி, நீதிமன்றத்தின் “சுதந்திரமான செயல்பாட்டை” மதிப்பதாகத் தெரிவித்தார். அதேவேளையில், அனைத்து நிலைகளிலும் உள்ள அரசுகள், “கனடியர்கள் அனைவரின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிப்பதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
2019ஆம் ஆண்டு கியூபெக் மாகாண அரசு இந்த சட்டத்தை இயற்றியபோது, கனடாவின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சாசனத்தில் (Charter of Rights and Freedoms) இடம்பெற்றுள்ள சில பாதுகாப்புகளை மீறிச் சட்டம் இயற்றுவதற்கு அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் 'விதிவிலக்கு அதிகாரப் பிரிவை' (Notwithstanding Clause) முறையாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், அந்த விதிவிலக்கு அதிகாரப் பிரிவின் பாதுகாப்பைப் பெற்றுள்ள சட்டங்கள் குறித்தும் நீதிபதிகள் அறிவிப்புகளை வெளியிட முடியும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சட்டம் நடைமுறையில் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், மசோதா 21 (Bill 21) கனடாவின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சாசனத்தை மீறுவதாக நீதிபதி ஒருவர் அறிவிக்க முடியும்.





