வட,கிழக்கு வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அவதானம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
பாரம்பரிய வைத்திய முறைமைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படும்.
வடக்கு மற்றும் கிழக்கில் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். மாகாண சபைகளின் நிர்வாக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்று சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 25-11-2026 அன்று நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சுகாதார அமைச்சின் குழுநிலை விவாதத்தில் 31 உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் புத்தளம் மாவட்ட உறுப்பினரும் தங்களுக்கு வழங்கப்பட்ட காலத்தை தமது பிரதேச மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறான பிரச்சினைகளை முன்வைக்கும் போது அது மத்திய அரசாங்க வைத்தியசாலைகளா? அல்லது மாகாண வைத்தியசாலைகளா? என்று பாராமல் அது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
இதேவேளை வெகுஜன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விடயத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக ஊடகவியலாளர்களுக்கு தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கை பத்திரிகை சபை சட்டத்தில் திருத்தங்களை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஊடகத்துறைகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் அரச அச்சக திணைக்கள ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக நிலவும் பிரச்சினையாக உள்ளது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று அரச அச்சக திணைக்களத்தின் பணிகள் தொடர்பில் மறுசீரமைப்பை செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சுதேச வைத்திய துறை மேம்பாட்டுக்காக 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 5615 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல் சுதேச வைத்தியத்துறையில் காணப்படும் அடிப்படை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக ஆயர்வேத சட்டத்தை திருத்தம் செய்ய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆயுர்வேத சிகிச்சை முறைமை ஊடாக தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயர்வேத மருத்துவ துறைக்கான புதிய நியமனங்கள் எதிர்வரும் மாதம் வழங்கப்படும். 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய ஆட்சேர்ப்புக்களும் இடம்பெறும்.
அதேபோல் பாரம்பரிய வைத்திய முறைமைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படும். ஹோமியோபதி சிகிச்சை முறைமைக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்த துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும், பிரதேச ஊடகவியலாளர்களுக்கு துறைசார் அடிப்படையில் பயிற்சியளிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இலங்கை பத்திரிகை சபை சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் சட்டவரைபு தயாரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஊடக ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான சட்டவரைவு எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.





