பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இலங்கை - ரஷ்யா இணக்கம்
தாதர்ஸ்தான் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இலங்கையின் புத்தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுறவு குறித்தும், இலங்கை மாணவர்கள் தாதர்ஸ்தானில் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.
கொழும்பில் எதிர்வரும் ஜனவரி 14 முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 'இலங்கை எக்ஸ்போ 2027' கண்காட்சியில் வர்த்தகப் பங்கேற்பை ஊக்குவிக்கவும், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இலங்கையும் ரஷ்யாவின் தாதர்ஸ்தான் குடியரசும் இணக்கம் கண்டுள்ளன.
ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர மற்றும் தாதர்ஸ்தான் குடியரசின் தலைவர் ருஸ்தம் மின்னிகானோவ் ஆகியோருக்கு இடையே கசான் நகரில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், எரிசக்தி, உரம், முதலீடு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும், இலங்கை ஊடாக பரந்த பிராந்தியச் சந்தைகளை தாதர்ஸ்தான் வர்த்தகங்கள் அணுகுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தாதர்ஸ்தான் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இலங்கையின் புத்தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுறவு குறித்தும், இலங்கை மாணவர்கள் தாதர்ஸ்தானில் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.
கைத்தொழில் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளித்து, இலங்கையுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் தாதர்ஸ்தான் உறுதியாக உள்ளதாக தாதர்ஸ்தான் குடியரசின் தலைவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





