இந்திய பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி முன்னிலையில் 3 ஒப்பந்தங்கள் பரிமாற்றம்
கொழும்பு கங்காரம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பௌத்த மத வழிபாடுகளிலும் அவர் பங்கேற்றிருந்தார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு முக்கிய அம்சமாக இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவுபடுத்துவதற்கான முக்கிய படியாக, கைச்சாத்திடப்பட்ட மூன்று புதிய ஒப்பந்தங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. 09-09-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் இவ்வொப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.
இலங்கை விமானப் படைக்காக டு70 துப்பாக்கிகளின் நவீனமயப்படுத்தல் ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் மற்றும் இலங்கை மாணவர் படையணி மற்றும் இந்திய மாணவர் படையணி ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஆகிய மூன்று ஒப்பந்தங்களும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இங்கு பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கொழும்பிலுள்ள இந்திய அமைதிப் படையினரின் நினைவுத் தூபியில், கடமையின் போது தமது உயிரை தியாகம் செய்த, அந்நாட்டு படையினருக்கு அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ள அவர், 'அவர்களது அந்த அதியுயர் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. எதிர்கால சந்ததியினருக்கான உத்வேகத்தின் மூலாதாரமாக அவர்கள் திகழ்வார்கள்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சிற்கு விஜயம் செய்த அமைச்சருக்கு அங்கு முப்படை மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது அவர் உயர்மட்ட பாதுகாப்பு படை பிரதானிகளையும் சந்தித்து கலந்துரையாடியதோடு, அங்கு 'இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா - இலங்கை கடல்சார் ஒத்துழைப்பு - ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட விதியைக் கொண்ட நாகரிகப் பங்காளிகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் கொழும்பு கங்காரம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பௌத்த மத வழிபாடுகளிலும் அவர் பங்கேற்றிருந்தார். கொழும்பில் தனது முக்கிய நிகழ்ச்சி நிரல்களை நிறைவு செய்த அமைச்சர், இன்று வியாழக்கிழமை நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





