பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்த வழக்கு - சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு
17 பக்கங்களைக் கொண்ட உத்தரவை வாசித்த நீதிவான், தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
பொலிஸ் மா அதிபர் குறித்து ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட குற்றத்தின் பேரில் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கடுவெல நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேற்படி வழக்கு 10-08-2026 அன்று கடுவலை பிரதான நீதிவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதற்கமைய 17 பக்கங்களைக் கொண்ட உத்தரவை வாசித்த நீதிவான், தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் சந்தேகநபருக்கு வெளிநாடு செல்ல பயணத்தடை விதித்து, இது குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அறியப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் நேற்று (10) முற்பகல் 10.45 மணியளவில் மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க வருகை தந்த வேளையில், குற்றச்சாட்டுகள் தெளிவுபடுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து மற்றும் அதன் மூலம் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நீதிவான், சாகர காரியவசமைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை செப்டம்பர் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.





